தமிழ்நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஊக்கத் தொகை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். - Minnalkalviseithi

Latest

Friday, 14 February 2025

தமிழ்நாட்டு வீரர் மற்றும் வீராங்கனைக்கு ஊக்கத் தொகை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை செல்வி கு. கமலினி மற்றும் டெல்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் திரு வி. சுப்ரமணி ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகையாக தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (10.2.2025) தலைமைச் செயலகத்தில், மலேசியாவில் நடைபெற்ற மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீராங்கனை செல்வி கு. கமலினி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை அவரது பெற்றோரிடம் வழங்கினார். மேலும், தில்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை ஆடவர் பிரிவில் இந்திய அணி கோப்பையை வெல்வதற்கு துணைபுரிந்த தமிழ்நாட்டு வீரர் திரு வி. சுப்ரமணி அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.

 விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும் பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. 

அந்த வகையில், மலேசியாவில் 19 வயதிற்குட்பட்ட மகளிருக்கான T20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 18 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த செல்வி கு. கமலினி இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார். அவர்தான் விளையாடிய ஏழு போட்டிகளில் ஒரு அரைச்சதம். 143 ரன்கள். 2 கேட்சுகள். 4 ஸ்டம்பிங் என நிகழ்த்தி அசாத்திய சாதனைகள்2 புரிந்துள்ளார். இந்தப் போட்டிகளில் செல்வி கு. கமலினி அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேலும், தில்லியில் நடைபெற்ற முதல் கோ-கோ உலகக் கோப்பை போட்டிகள் ஜனவரி 13 முதல் ஜனவரி 19, 2025 வரை நடைபெற்றன. இப்போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த திரு. வி. சுப்ரமணி அவர்கள் அபாரமாக விளையாடியதற்காக "சிறந்த தொடு தாக்கு வீரர் விருது" (Best Attacker Award) வென்றார்.

 இறுதிப் போட்டியில் நேபாள அணியை 54-36 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து, இந்திய அணி கோ-கோ உலகக் கோப்பையை வென்றது. இந்தப் போட்டிகளில் திரு. சுப்ரமணி அவர்களின் பங்களிப்பால் இந்திய அணி கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. கிரிக்கெட் வீராங்கனை செல்வி கு. கமலினி மற்றும் கோ-கோ வீரர் திரு. வி. சுப்ரமணி ஆகியோரது சாதனைகளைப் பாராட்டி ஊக்குவிக்கும் வகையில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் செல்வி கு. கமலினி மற்றும் திரு. வி. சுப்ரமணி ஆகியோருக்கு உயரிய ஊக்கத்தொகையாக தலா 25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கி பாராட்டினார். 

இந்த நிகழ்வின்போது. மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா. இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு, ஜெ. மேகநாத ரெட்டி இ.ஆ.ப.. ஆகியோர் உடனிருந்தனர். 


No comments:

Post a Comment