பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு - Minnalkalviseithi

Latest

Tuesday, 19 May 2026

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் செய்திக் குறிப்பு

 


அரசுத் தேர்வுகள் இயக்ககம், சென்னை – 6

பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு - மார்ச் / ஏப்ரல் 2026
தேர்வு முடிவுகள் வெளியீடு

செய்திக்குறிப்பு

மார்ச் / ஏப்ரல் 2026-ல் நடைபெற்ற 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20.05.2026 (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் வெளியிடப்படவுள்ளது. மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரிகள் அறிவிக்கப்படுகின்றன.

வகுப்புதேர்வு முடிவு வெளியிடப்படும் நாள் மற்றும் நேரம்இணையதள முகவரி
பத்தாம் வகுப்பு (SSLC) பொதுத்தேர்வு20.05.2026 (புதன்கிழமை) காலை 9.30 மணிwww.tnresults.nic.in
www.dge.tn.gov.in
results.digilocker.gov.in

தேர்வர்கள் மேற்கண்ட இணையதளங்களில் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த உறுதிமொழிப் படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணிற்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி (SMS) வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

WhatsApp மூலம் தேர்வு முடிவுகள் அறியும் முறை

WhatsApp செயலி வழியாகவும் தேர்வர்கள் பின்வரும் முறையை பின்பற்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்:

  • 7845252525 என்ற எண்ணை உங்கள் தொலைபேசி தொடர்புகளில் சேமிக்கவும்.

  • அந்த எண்ணிற்கு “Hi” என்று WhatsApp-ல் அனுப்பவும்.

  • பின்னர் வரும் செய்தியில் “Directorate of Government Examinations” மற்றும் தேர்வரின் வகுப்பை தேர்வு செய்யவும்.

  • தொடர்ந்து வரும் பதில் செய்தியில் தேர்வெண் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு அனுப்பினால், தேர்வு முடிவுகளை அதே WhatsApp உரையாடலில் அறிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் WhatsApp செயலியில் தேர்வு முடிவுகளை அறியும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உதவி எண்கள்

தேர்வு முடிவுகள் குறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 14417 என்ற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை அமைதியுடனும் தன்னம்பிக்கையுடனும் எதிர்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வில் பெறப்படும் மதிப்பெண்கள் மட்டுமே ஒருவரின் திறமை, ஆளுமை அல்லது எதிர்கால வெற்றியை தீர்மானிப்பவை அல்ல என்பதை மாணவர்கள் உணர வேண்டும்.

எதிர்பார்த்த முடிவுகள் அமையாத சூழலிலும் மனஉறுதியை இழக்காமல், எந்தவித மனஅழுத்தத்திற்கும் இடமளிக்காமல் நேர்மறை எண்ணத்துடன் முன்னேறுவது மிகவும் முக்கியமானதாகும். ஒவ்வொரு மாணவருக்கும் வாழ்க்கையில் சாதிக்கும் திறனும், முன்னேறும் பல்வேறு வாய்ப்புகளும் உள்ளன. கல்விப் பயணத்தில் ஒரு முடிவு இறுதியானதல்ல; தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றிக்கான புதிய வாய்ப்புகள் நிச்சயமாக உருவாகும்.

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு விரைவில் துணைத்தேர்வு எழுதுவதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், அவர்களின் முன்னேற்றத்திற்காக பள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும்.

இந்த காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அக்கறை, பொறுமை மற்றும் புரிதலுடன் ஆதரவாக இருப்பது அவசியமாகும். அதேபோல் ஆசிரியர்களும் மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டுதல், ஊக்கம் மற்றும் ஆலோசனைகளை வழங்கி, அவர்கள் நம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான ஆலோசனை உதவி எண்கள்:
14417 / 104 / 14416

ஒம்/-
அரசுத் தேர்வுகள் இயக்குநர்

இடம்: சென்னை – 6
நாள்: 19.05.2026

No comments:

Post a Comment