2025ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணம் - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம்

0 MINNALKALVISEITHI

2025ஆம் ஆண்டு ஹஜ் புனிதப் பயணத்திற்கான பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம்.

ஹஜ் புனிதப் பயணத்திற்கு தயாராகி வரும் தமிழ்நாடு உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம் ஹஜ் பயணிகளை பாதிக்கும் வகையில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு திடீரென ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து மாண்புமிகு இந்திய பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (16.4.2025) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், வரவிருக்கும் 2025 ஹஜ் புனிதப் பயணத்திற்கு ஆவலுடன் தயாராகி வரும் தமிழகம் உட்பட ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் மத்தியில் தனியார் ஹஜ் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்த செய்தி மிகுந்த வருத்தத்தை உண்டாக்கி உள்ளது என்றும் இந்த அவசர மற்றும் கவலையளிக்கும் விஷயத்தை மாண்புமிகு பிரதமர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்தக் கடிதத்தை எழுதுவதாகவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்து கடமைகளாகக் கருதப்படும் தூண்களில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இது முஸ்லிம்களுக்கு மிகவும் புனிதமான மற்றும் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளும் மதக் கடமையாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆன்மீக முக்கியத்துவத்தைக் கொண்டுள்ள இந்தப் புனிதப் பயணத்தை மேற்கொள்வதற்காக முஸ்லிம்கள் தங்கள் வாழ்நாள் சேமிப்பினை செலவு செய்கிறார்கள் என்றும், இந்த ஆண்டு, ஹஜ் பயணம் 4.6.2025 முதல் 9.6.2025 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து பயணிகள் வழக்கமாக 2025 மே மாதத்தில் சவுதி அரேபியாவுக்கு தங்கள் பயணத்தைத் தொடங்குவார்கள் என்றும் தனது கடிதத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2024 ஆம் ஆண்டில், சுமார் 1,75,000 இந்திய ஹஜ் பயணிகள் புனிதப் பயணத்தில் பங்கேற்றதாகவும், இதற்காக ஜனவரி 2025-இல், இந்தியா சவுதி அரேபியாவுடன் இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு, 1,75,025 ஹஜ் பயணிகளுக்கான ஒதுக்கீட்டை இறுதி செய்தது என்றும், இந்த ஒதுக்கீடு 70:30 என்ற விகிதத்தில் மாநில ஹஜ் கமிட்டிகள் மற்றும் தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களிடையே பிரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான மாநில ஹஜ் குழுக்களுக்கு 1,22,517 இடங்களும், தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு 52,507 இடங்களும் ஒதுக்கப்பட்ட நிலையில் சவுதி அரேபியா திடீரென இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீட்டை குறைத்துள்ளதாகத் தாம் அறிய வந்துள்ளதாகவும், அதன் காரணமாக தனியார் ஹஜ் சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 52,000 ஹஜ் இடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த திடீர் முடிவு ஏற்கனவே பணம் செலுத்தியுள்ள பல ஹஜ் பயணிகளை ஆழ்ந்த கவலையிலும் நிச்சயமற்ற நிலையிலும் ஆழ்த்தியுள்ளது என்று தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையின் தன்மையைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சனையை அவசரமாக சவூதி அரேபிய அரசிடம் எடுத்துச்சென்று விரைவான தீர்வினைப் பெறவேண்டும் என்றும், மாண்புமிகு பிரதமரின் தலையீடு, ஹஜ் ஒதுக்கீட்டில் முந்தைய அளவினை மீண்டும் கொண்டுவந்து, ஹஜ் பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் ஹஜ் பயணத்தை மேற்கொள்வதற்கான உறுதியை அளிக்கும் என்றும் தாம் உறுதியாக நம்புவதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.