தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்க நிகழ்ச்சி 19.02.2025

0 MINNALKALVISEITHI
தமிழ்த்தாத்தா டாக்டர் உ.வே.சா. அவர்களின் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்க நிகழ்ச்சி 19.02.2025 
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதையர் அவர்களின் தமிழ்த்தொண்டினைப் போற்றும் வகையில் ஆண்டுதோறும் பிப்பிரவரித் திங்கள் 19ஆம் நாளன்று தமிழ்த் தாத்தாவின் திருவுருவச் சிலைக்குத் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் மாலை அணிவித்து மலர்வணக்கம் செய்யப்பட்டு வருகிறது. வான்புகழ் தமிழையும் வங்கக் கடற்காற்றையும் தமிழ் மூச்சுடன் உலகுக்கு உவந்தளித்த மகாமகோபாத்தியாய, மகாவித்துவான் வே.சாமிநாதையர் - டி.லிட் அவர்களின் 171ஆம் பிறந்தநாளான உத்தமதானபுரம் 2025 பிப்ரவரித் திங்கள் 19ஆம் நாளன்று (புதன்கிழமை) சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் (07.03.1948 அன்று) நிறுவப்பட்ட திருவுருவச் சிலைக்கு காலை 9.45 மணிக்கு மலர்வணக்க நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. திராவிட வித்யாபூஷணம் உ.வே. சாமிநாதையர் (1855-1942) தமது இளம் பருவம் முதல் இறுதி நாள் வரையில் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடுவதையும். ஆராய்வதையும், அச்சிட்டு வெளியிடுவதையும் வாழ்நாட்குறிக்கோளாகக் கொண்டார். 

சங்க நூல் முதல் பிரபந்த நூல் வகை வரை எழுத்தெண்ணி ஆய்ந்து அச்சிட்டு வெளியிட்டார். நூலிலுள்ள பாடல்களின் முதற்குறிப்பு, நூற்கருத்து எனப் பல திறம் வாய்ந்த நுண்ணாய்ந்த குறிப்புகளை வெளியிட்ட திறத்தினை அவருடைய ஒவ்வொரு படைப்பிலும் காணலாம். அத்தகைய குறிப்புகள் தமிழ் மாணவர்கட்கு உற்றுழி உதவும் அருநிதிச் செல்வமாய்த் திகழ்கின்றன. அதனாலன்றோ அவரைத் தமிழ்த்தாத்தா என்று வணங்கி மகிழ்கின்றோம். அவர் அளித்த தமிழ்ச் செல்வங்களாகிய நூல்கள் இப்பொழுதும் அறிஞர்களுக்குக் கருத்துக் கருவூலமாக விளங்கி வருகின்றன. 87 ஆண்டுகள் வாழ்ந்த தமிழ்த்தாத்தா 87 நூல்களைப் படைத்தளித்து தமிழைப் போற்றினார். அவரைத் தமிழ்த் தொண்டர்களான செந்நெறிப் புலவர்கள் இன்றும் என்றும் கொண்டாடி மகிழ்வர் என்பது உறுதி.தமிழ்ச் சுவடிகளைத் தேடித் திரட்டிப் பிழைகளைத் திருத்தி, உரை மாலையாக அளித்து, அச்சிட்டு, நூல்களாக வெளியிட்டு தமிழ்மொழிக்கு வளம் சேர்த்த முதுபெரும் தமிழறிஞரின் பணி தமிழ் உலகில் காலமெலாம் புலவோர் வாயில், என்றென்றும் நிலைத்துப் போற்றுதற்குரியதாகும். 

உ.வே.சாமிநாதையரின் நினைவினைப் போற்றும் வகையில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும், அரசு உயர் அலுவலர்களும், தமிழறிஞர்களும், பொதுமக்களும் மலர் வணக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான முன்னெடுப்புகளைத் தமிழ் வளர்ச்சித் துறை மேற்கொண்டு வருகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.