மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஏப்ரல் 17-ஆம் நாள் அன்று அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள். சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த ஏப்ரல் 17-ஆம் நாள் காலை 9.30 மணியளவில், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, திரு.வி.க. தொழிற்பேட்டை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அவருடைய திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
தீரன் சின்னமலை அவர்கள் ஈரோடு மாவட்டம் காங்கேயம் அருகில் மேலப்பாளையம் எனும் சிற்றூரில் பிறந்தார். இவரது இயற்பெயர் தீர்த்தகிரி. தீரன் சின்னமலை அவர்கள் இளம் வயதிலேயே போர்க்கலைகளான வாள்பயிற்சி, வில் பயிற்சி, சிலம்பாட்டம், மல்யுத்தம், தடிவரிசை போன்றவற்றைக் கற்றுத் தேர்ந்து சிறந்த இளம் வீரராகத் திகழ்ந்தார்.
வீரம் செறிந்த பல்வகைப் போர்க்கலைகளையும் கற்றுத் தேர்ந்து, போர்த் தந்திரங்களில் தனது படைகளுக்கும் பயிற்சிகள் அளித்தார். இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று ஆங்கிலேயர்களுக்குச் சவால் விட்டு அவர்களின் கிழக்கிந்தியக் கம்பெனியை அடியோடு ஒழிக்க நடவடிக்கை மேற்கொண்டார்.
கொங்கு மண்ணில், அன்றைய மைசூர் அரசு வசூலித்த வரியைத் தடுத்து நிறுத்தியதால், "சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை" என்று பெயர் பெற்றார்.அதன்பின் ஆங்கிலேயர்கள் தீரன் சின்னமலையை அழிக்க முயன்று 1801-இல் காவிரிக் கரையிலும் 1802-இல் ஓடாநிலையிலும், 1804-இல் அரச்சலூரிலும் ஆக மூன்று முறை போர் நடத்தியும் அவர்கள் தோற்றனர். ஓடாநிலைப் போரில் ஆங்கிலக் கம்பெனித் தளபதி மேக்ஸ்வெல் கொல்லப்பட்டார். பின்னர். ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால், சமையல்காரனால் காட்டிக் கொடுக்கப்பட்டு சின்னமலை கைது செய்யப்பட்டார். பின், அவர் 31.7.1805 அன்று சங்ககிரி கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தம் ஆட்சிக் காலத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், சென்னை, கிண்டியில் அவருடைய திருவுருவச்சிலையை நிறுவி 4.10.1998 அன்று தம் பொற்கரங்களால் திறந்துவைத்தார்கள்.
தமிழ்நாடு அரசின் சார்பில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, நடைபெறும் இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். மாண்புமிகு மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள். சீர்மிகு பெருமக்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கிறார்கள்.