குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார்.

0 MINNALKALVISEITHI
குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவியர்களுக்கும், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற துறைகளுக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். 

சென்னை, காமராசர் சாலையில் நேற்று (26.1.2025) நடைபெற்ற குடியரசு நாள் விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள், தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள். 

பின்னர், வீரதீரச் செயலுக்கான அண்ணா பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கங்கள், கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம், டாக்டர் நாராயணசாமி நாயுடு வேளாண்மை விருது, சிறந்த காவல் நிலையத்திற்கான முதலமைச்சரின் கோப்பைகள் ஆகிய பதக்கங்களையும், கோப்பைகளையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார். 

அதனைத் தொடர்ந்து, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளையும், தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையம் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகளையும், பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பினை பார்வையிட்டார்கள். 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (27.1.2025) தலைமைச் செயலகத்தில், குடியரசு நாள் விழாவில் நடைபெற்ற பள்ளி மாணவியர்களின் கலை நிகழ்ச்சியில் முதல் பரிசு பெற்ற கொளத்தூர், எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ள மாணவியர்களுக்கும், மூன்றாம் பரிசு பெற்ற குரோம்பேட்டை ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் கல்லூரி மாணவியர்களுக்கும் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். 

குடியரசு நாள் விழாவில், அரசின் திட்டங்களை விளக்கி அணிவகுத்து வந்த அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நிகழ்ச்சியில், முதல் பரிசு பெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் சார்பில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் திரு. ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., ஆகியோருக்கும், இரண்டாம் பரிசு பெற்ற காவல் துறையின் சார்பில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தீரஜ் குமார், இ.ஆ.ப., காவல்துறை கூடுதல் ஆணையர் திரு. என். கண்ணன், இ.கா.ப., ஆகியோருக்கும், மூன்றாம் பரிசு பெற்ற இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு. பி.என். ஸ்ரீதர், இ.ஆ.ப., இணை ஆணையர் திரு. ச. இலட்சுமணன் ஆகியோருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கேடயங்களை வழங்கி வாழ்த்தினார். இந்நிகழ்ச்சியில், 

மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., பொதுத்துறை செயலாளர் திருமதி ரீட்டா ஹரீஷ் தக்கர், இ.ஆ.ப., பொதுத்துறை துணைச் செயலாளர் (மரபு) திருமதி ஜெ.இ. பத்மஜா, இ.ஆ.ப., பள்ளிக்கல்வி இயக்குநர் திரு. கண்ணப்பன், அரசு உயர் அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். 


إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.