தேசிய அறிவியல் விழாவை தொடங்கி வைத்தும், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) உயர்கல்வித் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட 55 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்
சென்னை, பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மைய வளாகத்தில், 17.04.2025 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிவியல் தொழில்நுட்பத்தை அனைவரும் அறிந்து பயன்பெறும் வகையில் நடத்தப்படும் தேசிய அறிவியல் விழாவை தொடங்கி வைத்தும், பள்ளி மாணவர்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC) உயர்கல்வித் துறைக்கு தேர்தெடுக்கப்பட்ட 55 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது.
மாணவர்களிடையே மூட நம்பிக்கைகளை அகற்றிடவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பொது மக்களிடையே குறிப்பாக மாணவ சமுதாயத்தினரிடையே பரப்புவதற்காக அறிவியல் தொழில்நுட்ப மையம் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் மாணவர்களுக்கு அறிவியல் கருத்துக்களை பரப்பும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் அறிவியல் சார்ந்த போட்டிகளை ஆண்டு முழுவதும் நடத்தி வருகிறது.
மேலும், அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று தேசிய அறிவியல் தினத்தை கொண்டாடும் விதமாக பல்வேறு அறிவியல் சார்ந்த போட்டிகள் நடத்தப்படுகிறது. 5.01.2025 அன்று 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை நடத்தப்பட்ட கணித திறனறித் தேர்வில், சென்னை மற்றும் சென்னையை சுற்றியுள்ள பள்ளிகளிலிருந்து 8,017 மாணவர்கள் கலந்து கொண்டனர். மேலும், 17.02.2025 மற்றும் 18.02.2025 ஆகிய இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட தேசிய அறிவியல் தின போட்டிகளில் 112 பள்ளிகளைச் சேர்ந்த 242 மாணவர்கள் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில், 100 மாணவர்கள் பரிசுகளை வென்றுள்ளனர். அறிவியல் நம் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது என்பது நாம் அறிந்தது தான். அறிவியல் தொழில்நுட்ப மேம்பாடு என்பது சமுதாய வாழ்வின் மேம்பாடு என்றே சொல்லலாம். அறிவியலைக் கொண்டுதான் சமுதாய வாழ்வின் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும்.
"வேப்பமரத்து உச்சியில் நின்று பேய் ஒன்று ஆடுது என்று சொல்லி வைப்பாங்க! பிள்ளையின் வீரத்தை முளையிலேயே கிள்ளி வைப்பாங்க" என்று பட்டுக்கோட்டையார் பாடியிருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற பல்கலைக்கழக வேந்தர்கள் மற்றும் பதிவாளர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கல்வி நிலையங்களில் அறிவியல் பூர்வமன கருத்துக்களும், கல்வியும் மட்டுமே போதிக்கப்பட வேண்டும் என்றும், எக்காரணத்தைக் கொண்டும் அங்கு பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக்கதைகளையோ தவறியும் மாணவர்களிடையே பரப்பிவிடக் கூடாது என்று வலியுறுத்தினார்கள். குழந்தைப் பருவம் முதலே அறிவியல் உணர்வை நாம் வளர்க்க வேண்டும். அறிவியல் உணர்வு வளர்ந்தால் தான் நமது நாட்டில் மூடநம்பிக்கைகள் ஒழியும்.
நமது தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். இதற்காகத்தான் நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவியல் ஆய்வுகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவித்தொகைகளை (ஆராய்ச்சி உதவித்தொகைகள்) அறிவியல் ஆய்வில் ஈடுபடும் மாணவர்களுக்காக வழங்கி வருகிறார். சிறந்த அறிஞர்களுக்கு (இஸ்ரோ விஞ்ஞானிகள்) பாராட்டும் பரிசுகளும் வழங்கி வருகிறார். 2025-2026-ஆம் நிதி நிலை அறிக்கையில், ரூ.100 கோடி மதிப்பீட்டில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் அரசு பங்களிப்புடன் சென்னை அறிவியல் மையம் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பிற்கான பூர்வாங்கப் பணிகள் தற்சமயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாணவர்களை மேம்படுத்துவதையும் கல்விச் சூழலை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு உயர்கல்வித்துறை முக்கிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்பொழுது தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் நடத்தியுள்ள அனைத்துப் போட்டியிலும் வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தி, அவர்கள் மேலும், மேலும் பல பரிசுகளை பெற வாழ்த்துகிறேன். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணயத்தின் (TNPSC) மூலம் தேர்வு செய்யப்பட்டு உயர்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 55 நபர்களுக்கு நியமனம் ஆணை வழங்குவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். பணி நியமன ஆணைகளை பெற்றவர்கள் அரசு பணியில் செவ்வனே பணியாற்ற என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறேன். அரசு பணியில் இணையும் நீங்கள் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு தங்கள் பணியினை மேற்கொள்ள வேண்டும். மேலும், ஆசிரியர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளின்படி மாணவர்களிடையே அறிவியல் கருத்துகளை பரப்பிட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
"அறிவுடையார் எல்லாம் உடையார்" என்பது அய்யன் திருவள்ளுவர் வாக்கு. எனவே, அறிவியல் கண்டுபிடிப்புகளும் அறிவியல் ஆய்வுகளும் மேன்மேலும் மாணவர்களால் நிகழ்த்தப்பட வேண்டும். நமது தமிழ்நாடு அறிவியலில் உலகிலேயே முதல் இடத்தைப் பிடிக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களிடையே அறிவியல் கருத்துகளை பரப்பிட வேண்டுமென இந்த விழாவின் மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை செயலாளர் திரு.சி. சமயமூர்த்தி. இ.ஆ.ப., கல்லூரி கல்வி ஆணையர் திருமதி எ. சுந்தரவள்ளி. இ.ஆ.ப., தொழில்நுட்பக் கல்வி இயக்கக ஆணையர் திருமதி ஜெ. இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மைய செயல் இயக்குநர் (மு.கூ.பொ) திரு. இ.கி. இலெனின் தமிழ்க்கோவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.