நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை.

இந்த நீலகிரியின், மலை அழகை ரசிக்கவா? அருவியில் நனையவா? ஆறுகளில் குளிக்கவா? அணைகளைப் பார்க்கவா? பழங்குடி மக்களின் பண்பாட்டை போற்றவா? முதுமலைக்குச் செல்லவா? தேநீரை ருசிக்கவா? தாவரவியல் பூங்காவை பார்க்கவா? இல்லை படகு சவாரி செய்யவா? என்று இப்படி உதகைக்கு வருகின்ற எல்லோருக்குமே ஆர்வமும், ஆசையும் மனதிற்குள்ளே உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்! அந்தளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் மலைகளின் அரசியான ஊட்டிக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!

இந்த எழுச்சிமிகு அரசு விழாவில் பங்கேற்று இருக்கக்கூடிய

மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள்

திரு. எ.வ.வேலு அவர்களே, பொறுப்பு அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்களே, திரு. மா. சுப்பிரமணியன் அவர்களே, அரசுக் கொறடா திரு. ராமச்சந்திரன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் அன்புக்குரிய திரு. ஆ. ராசா அவர்களே, சட்டமன்ற உறுப்பினர் திரு. கணேஷ் அவர்களே, அரசு துறைச் செயலாளர்கள்

முனைவர் செந்தில் குமார் இ.ஆ.ப., அவர்களே,

திரு. ஜெயகாந்தன் இ.ஆ.ப., அவர்களே,

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துக் கொண்டிருக்கக்கூடிய என்னுடைய மதிப்பிற்குரிய மரியாதைக்குரிய திரு. இந்து ராம் உள்ளிட்ட முக்கிய விருந்தினர்களே,

துவக்கத்தில் வரவேற்பு நல்கியிருக்கக்கூடிய நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களே,

உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளே,

அரசு உயர் அலுவலர்களே,

நலத்திட்ட உதவிகளை பெறுவதற்காக வந்திருக்கக்கூடிய பெருமக்களே, பயனாளிப்

என்னுடைய பாசத்திற்கும், பேரன்புக்குரிய மகளிர் சுய உதவிக் குழுவைச் சார்ந்திருக்கக்கூடிய தாய்மார்களே, சகோதரிகளே,

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையைச் சார்ந்திருக்கக்கூடிய நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம்.

உங்கள் ஊருக்கு விருந்தினராக வந்திருக்கின்ற எனக்கு, உங்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகதான் இருக்கிறது! கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு ஒரு இளைப்பாறலாக, நீலகிரி மாவட்டத்தில், இந்த மாபெரும் அரசு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவை மிகுந்த எழுச்சியோடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பு அமைச்சர் மாண்புமிகு திரு. மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், அரசு கொறடா திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என்று அடையாளம் காணப்பட்டு, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அறிவிற் சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழும் உங்கள் எம்.பி.. திரு. ஆ.ராசா அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் திருமதி. லட்சுமி பவ்யா அவர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் துணையாக இருந்து கடமையை நிறைவேற்றி இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்!

"நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளம், தி.மு.க. ஆட்சி" என்று சொல்கின்ற அளவுக்கு இந்த மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம்! அந்தச் சாதனைப் பட்டியலில் சிலவற்றை மட்டும் நான் சொல்லவேண்டும் என்றால்,

உதகை ஏரி புதுப்பிப்பு!

சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை!

இலவச இளம் படுகர் நலச்சங்கக் கட்டடம்!

முதுமலை சரணாலயம் விரிவாக்கம்!

இலங்கையில் இருந்து திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை கூடலூர், பந்தலூர், கோத்தகிரி வட்டங்களில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் உருவாக்கியது.

தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது மட்டுமல்ல, தேயிலை விவசாயிகளுக்கு மானியம்!

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1996-ஆம் ஆண்டு முதல் 20 விழுக்காடு தீபாவளி போனஸ்!

பழங்குடி மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் “மின் இணைப்பு” மற்றும் கலர் டி.வி! கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு “மின் இணைப்பு”.

இப்படி நீண்ட பட்டியலே போடலாம். இது மட்டுமல்ல,

நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, உதகைக்கு மூன்றாவது குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்தேன்.

அதேபோல, உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு 'கடை உரிமை' நீட்டித்து, பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி கொடுத்தேன்!

உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா இருக்கிறாரே, முதலமைச்சரான தலைவர் கலைஞரும் - துணை முதலமைச்சராக நானும், ஏன் இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும் அடிக்கடி சந்திக்கின்றபோதெல்லாம் நீலகிரி தொகுதிக்குத் தேவையான பல திட்டங்களைக் கேட்டு வாங்கிவிடுவார். ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். அந்த வகையிலேயும் இந்த தொகுதிக்கு ஏராளமான பணிகளை அவர் செய்து கொடுத்திருக்கிறார். அதனால்தான், எப்போதும் உங்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார். இப்போது முதலமைச்சரானவுடன் மாநிலத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றான எடை குறைவான குழந்தைகளுக்கு “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை இந்த ஊட்டியில் தான் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்தபோது நான் தொடங்கி வைத்தேன்.

உங்களுக்கு நன்மை செய்வதற்கு முதல் ஆளாக இருப்பவர்களும் நாங்கள்தான்! உங்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து, துணை நிற்கக்கூடிய, துயர் துடைக்கின்ற முதல் ஆளாக இருப்பவர்களும் நாங்கள்தான்!2009-ல் வெள்ளம் ஏற்பட்டபோது, துணை முதலமைச்சராக இருந்த நான், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதற்கு நானே நேரடியாக வந்தேன். 2019-ல் நிலச்சரிவு ஏற்பட்டபோது, இரண்டு நாட்கள் இங்கேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன். நம்முடைய திரு. ஆ.ராசா, திரு. திராவிட மணி, திரு.ஆர்.கணேசன், திரு. க.ராமச்சந்திரன், திரு. முபாரக் ஆகியோர் என் கூடவே இருந்தார்கள்.

நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை எல்லாம் பார்த்து, வீடுகளை இழந்தவர்களை சந்தித்து, உதவிகளை செய்தோம், ஆறுதலை சொன்னோம். அன்றைய ஆட்சியாளர்கள் தூக்கத்தில் இருந்த ஆட்சியாளர்களை எழுப்பி நீலகிரிக்கு வரவழைத்ததும் தி.மு.க.தான்! நாம் கேள்வி எழுப்பிய பிறகுதான், சில மணி நேரங்களாவது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டுட்டு போனார் அன்றைய முதலமைச்சர்.

இதுதான் மக்களுடன் இருக்கக்கூடிய தி.மு.க.வுக்கும் மக்களை ஏமாற்ற நினைக்கும் மற்றவர்களுக்கு இருக்கக்கூடிய வேறுபாடு! அதனால்தான், உங்களுடைய ஆதரவுடன் வளர்ச்சியை நோக்கி திராவிட மாடல் ஆட்சியை நாம் கம்பீரமாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்!

உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் முதலிடம்! இந்தியாவிலேயே வறுமை நிலை குறைவான, பட்டினிச்சாவே இல்லாத மாநிலம் என்று சாதித்திருக்கிறோம்! நேற்று காலையில், இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலில், 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடுதான் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதலிடம் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெஸ்ட் இதுதான்! அதுவும் மற்ற அனைத்து மாநிலத்திலேயும் வளர்ச்சி குறைந்து கொண்டு வருகின்ற இந்த சூழலில், தமிழ்நாடு மட்டும் 'டாப்' கியரில் போவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்! இந்த தனித்துவமும், தலைமைத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல்!

இப்படிப்பட்ட வளர்ச்சியை நோக்கிய காலகட்டத்தில், இந்த நீலகிரி மாவட்டத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, கடந்த 4 ஆண்டுகளில் செய்து தந்திருக்கிற, இனியும் நிறைவேற்றப் போகின்ற திட்டங்களை நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வு நடத்தினேன். 60 அறிவிப்புகள் செய்து அதில் பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றி, மீதியிருக்கக்கூடிய திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு விரைவுபடுத்த சொல்லியிருக்கிறேன். அந்த பட்டியலை மட்டும் சொல்லட்டுமா?

நீலகிரியில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு ஆயிரம் கான்கிரீட் வீடுகள்!

மருத்துவத் துறையில் முழுமை பெற்ற மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, உதகையில், மருத்துவகல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். கடந்த ஆட்சியில் இதை அறிவித்தவுடன், வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் அடிக்கடி இந்த மாவட்டத்திற்கு வந்து இந்த மருத்துவமனை பணிகளை எல்லாம் ஆய்வு செய்தார். ஏனென்றால், மலைப்பகுதியில் இப்படி ஒரு மருத்துவமனையை அமைப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. சாதாரண காரியமல்ல. பல சவால்கள் நிறைந்தது. அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து திறந்து வைத்திருக்கின்ற இந்த மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டை நம்முடைய மருத்துவத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்வார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் திறந்து வைத்திருக்கிறோம். ஏனென்றால், நம்முடைய அரசின் முத்திரைத் திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், மலைப் பிரதேசமான இந்த நீலகிரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது நம்முடைய மருத்துவத் துறை. வாகனங்கள் செல்ல முடியாத பழங்குடியினர் இடத்திற்கு கூட நம்முடைய அரசின் இந்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து 5 இலட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வீடுகளுக்குச் சென்ற மருத்துவத்தை செய்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல, கூடலூரில் அரசு தலைமை மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.இதேபோல, குன்னூர், கோத்தகிரி உட்பட எல்லா வட்டங்களிலும், அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் துவங்கப்பட்டிருக்கிறது.

வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கடந்த காலங்களில் 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை உயர்த்தி, 10 லட்சம் ரூபாயாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.

அழிவின் விளிம்பில் இருந்த மாநில விலங்கான வரையாடுகளின் எண்ணிக்கைய அதிகரிக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் கூடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மினி டைடல் பார்க் வரப் போகிறது.

தெப்பக்காடு யானைகள் முகாம் நவீனமயம் ஆகப் போகிறது.

கூடலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துகின்ற பணிகள் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.

குந்தா மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

61 மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளும்,

பள்ளிக்கல்வித் துறை மூலமாக 197 பணிகளும்,

அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 404 பணிகளும்

15 கோவில்களுக்கு குடமுழுக்கும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இப்படி ஏராளமான பணிகளை செய்து கொண்டு வருகிறோம். இது மட்டுமா? இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில்,

குன்னூரில் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியின மாணவர்கள் உட்பட எல்லா தரப்பு மக்களும் எளிதாக உயர்கல்வி பெற புதிய கலைக் கல்லூரியை அறிவித்திருக்கிறோம்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.