மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) கோயம்புத்தூர், கொடிசியா மைதானத்தில், கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை புரிந்த 16 ஆயிரம் பெண்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.
என் உரையை தொடங்குவதற்கு முன்பு கலைக்குழு சார்பில், வள்ளிக்கும்மியில் பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு முதலில் என்னுடைய வாழ்த்துகள், பாராட்டுக்கள். கலக்கீட்டிங்க. பெண்கள் என்றாலே சாதனைதான்; சாதனை என்றாலே பெண்கள் தான். எனவே, சாதனை பெண்களுக்கு மீண்டும் என்னுடைய பாராட்டுக்கள்; வாழ்த்துகள்.
இந்த நிகழ்ச்சிக்கு தலைமையேற்றிருக்கக்கூடிய கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும், திரு. ஈ.ஆர்.ஈஸ்வரன் அவர்களே, சட்டமன்ற உறுப்பினருமான
கோவை மாவட்டத்தின் பொறுப்பு திரு. செந்தில்பாலாஜி உள்ளிட்ட அமைச்சர் பெருமக்களே, அமைச்சர் மாண்புமிகு
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகளே, வள்ளிக்கும்மி ஆசிரியர் பெருமக்களே, கின்னஸ் சாதனைப் படைத்துள்ள என் பாசத்திற்குரிய சகோதரிகளே, அனைவருக்கும் வணக்கம்.
இங்கே நிறைய மகளிர் இருக்கிறீர்கள். என்னைப் பொறுத்தவரை இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சி தான் என்பதும் உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த உணர்வோடு, இந்த சிறப்பான நிகழ்ச்சியில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்து கொண்டு உங்களை எல்லாம் வாழ்த்துவதற்கு வந்திருக்கிறேன்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் நடைபெறும் இந்த வள்ளிக்கும்மி கின்னஸ் சாதனை பாராட்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கொங்குநாடு கலைக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வள்ளிக்கும்மியில் இதுவரை 16 ஆயிரம் பெண்கள் பங்கெடுத்திருப்பது என்பது மிகப் பெரிய சாதனையாக அமைந்திருக்கிறது. எனவே, இந்த விழாவில் நான் பங்கெடுக்க வேண்டும் என்று நம்முடைய அன்புக்குரிய திரு. ஈஸ்வரன் அவர்கள் என்னிடத்தில் அழுத்தமாக எடுத்துச் சொல்லி, அன்போடு கேட்டு, அவருடைய அன்பை தட்டமுடியாமல் நானும் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். இந்த வாய்ப்பை எனக்கு உருவாக்கித் தந்திருக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய திரு. ஈஸ்வரன் அவர்களுக்கும், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் நிர்வாகிகளுக்கும், இந்த வள்ளிக்கும்மி விழாவில் பங்கேற்று இருக்கக்கூடிய அருமை சகோதரிகளுக்கும் என்னுடைய நன்றியை நான் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும், மக்களுக்காக போராடியும், வாதாடியும், இந்த மேற்கு மண்டலத்தில் எல்லோருடைய கவனத்தையும் பெற்றவர் நம்முடைய அன்புக்குரிய ஈஸ்வரன் அவர்கள். அவர் என்ன பேசினாலும், எங்கே சென்று பேசினாலும், அதில் மேற்கு மண்டலத்தின் மக்களுடைய நன்மை அடங்கியிருக்கும். நான் கூர்ந்த கவனிப்பதுண்டு. அவருடைய பேச்சிலும் எதிரொலிக்கும்.
அதேபோல, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை பொறுத்தவரைக்கும், அவரே குறிப்பிட்டுச் சொன்னார். நான் ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னால், தேர்தல் நிலவரங்கள் எல்லாம் முடிவுறக்கூடிய சூழ்நிலை வந்தபோது, நான் கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று, வாக்குகள் எண்ணப்பட்ட லயோலா கல்லூரிக்கு சென்று வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்று, அதற்கு பிறகு அறிஞர் அண்ணா, நம்முடைய தலைவர் கலைஞர் ஆகியோருடைய நினைவிடத்திற்குச் சென்று அங்கே அவர்களுக்கு மரியாதையை செலுத்தியபின்பு, பத்திரிகை நிருபர்கள் எல்லாம் என்னை சூழ்ந்து கொண்டு கேட்டார்கள் - ஆட்சிப் பொறுப்பு ஏற்கப் போகிறீர்கள் - தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள் என்று கேட்டார்கள். நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. ஒன்றே ஒன்று அழுத்தமாக சொல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். என்னை நம்பி வாக்களித்திருக்கக்கூடிய மக்களுக்கு மட்டுமல்ல; வாக்களிக்க தவறியவர்களுக்கும் சேர்த்து இந்த ஆட்சி நடைபெறும். அதையும் தாண்டி சொல்கிறேன். வாக்களித்தவர்கள் மகிழ்ச்சி அடையவேண்டும். வாக்களிக்க தவறியவர்கள் இப்படிப்பட்டவருக்கு வாக்களிக்காமல் தவறிவிட்டோமே என்று வருத்தப்படவேண்டும். அந்த வகையில் நிச்சயமாக எங்களுடைய ஆட்சி இருக்கும் என்று நான் உறுதியாக சொன்னேன்.
அப்படித்தான் இந்த மேற்கு மண்டலத்திற்கும் ஏராளமான திட்டங்களை நம்முடைய அரசு செய்து கொண்டிருக்கிறது என்பதை நம்முடைய திரு. ஈஸ்வரன் அவர்கள் நேரமில்லாத காரணத்தால் அது ஒன்றை மட்டும் தெளிவாக குறிப்பிட்டுச் சொன்னார்.
உங்களுடைய நன்மதிப்பையும் நாங்கள் பெற்றிருக்கிறோம். அதனால்தான், தொடர்ந்து 2024 நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க அமோகமான வெற்றி முழுமையான வெற்றியை பெற்றோம். அந்த 40க்கு 40 என்ற முழு வெற்றியைப் பெற்றிருக்கிறோம் என்று சொன்னால், நம்முடைய ஆட்சிக்கு கிடைத்திருக்கின்ற நற்சான்றிதழ். அதைப்போல் வருகிற 2026-ஆம் ஆண்டும் மீண்டும் சொல்கிறேன் நாம் தான் வெற்றி பெற போகிறோம். நம்முடைய அணி தான் வெற்றி பெற போகிறது நிச்சயம் அது தொடரும்!
ஆனால், இன்றைக்கு திரு.மோடி அவர்கள் தலைமையில் இருக்கக்கூடிய ஒன்றிய அரசு, நம்முடைய ஆட்சி போல இல்லாமல், வாக்களிக்காத தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிறது. அவர்களுடைய வஞ்சனையையும் கடந்து, வளர்ச்சியில் தமிழ்நாடு இன்றைக்கு அனைத்துத் துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு முறையாக நிதிகளை வழங்கி, தமிழ்நாட்டிற்குரிய திட்டங்களை செய்து தரும் ஒன்றிய அரசு அமைந்திருந்தால், இன்றைக்கு இந்திய அளவில் இல்லை உலகளவில் நாம் தான் இன்றைக்கு முதலிடத்தில் இருப்போம். அந்த அளவிற்கு இன்னும் வேகமாக நடைபோட்டுக் கொண்டிருக்கக்கூடிய வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்கும்.
இன்றைக்கு காலையில் கூட தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிக்கப்படாது என்ற உறுதியை மாண்புமிகு பிரதமர் அவர்கள் வழங்கவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். நான் தெளிவாக குறிப்பிட்டுச் சொன்னேன்.
பிரதமர் அவர்கள் இன்னும் அரை மணி நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வருகிறார்; ராமேஸ்வரத்திற்கு வருகிறார் பாலத்தை திறந்து வைக்கப் போகிறார். அதுவும் எங்கே இருந்து வருகிறார் என்று கேட்டால், இலங்கையிலிருந்து வருகிறார். இலங்கையில் நம்முடைய மீனவர்கள் துன்பத்திற்கு ஆளாகக்கூடிய அந்த துயரத்திற்கெல்லாம் ஒரு விடிவு கிடைக்கும். அதையெல்லாம் பேசிவிட்டு வந்து இங்கே செய்தியை சொல்வார். தொகுதி மறுசீரமைப்பைப் பற்றி நாம் அழுத்தமாக சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களை எல்லாம் அழைத்து விவாதித்திருக்கிறோம். அதற்குப் பிறகு தென் மாநிலங்கள் மட்டுமல்ல வட மாநிலங்களில் இருக்கக்கூடிய மாநில தலைவர்களும், 3 முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர் பங்கேற்ற கூட்டம் கடந்த 22-ஆம் தேதி நடைபெற்றது. அதில் தீர்மானம் போட்டு, பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம். இன்னும் இதுவரை அவரிடமிருந்து ஒப்புதல் வரவில்லை.
இதற்கிடையில் நீங்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறீர்கள். வரக்கூடிய நீங்கள் அதைத் தெளிவுப்படுத்தவேண்டும் அதை விளக்கமாக குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். ஆனால் மக்களுடைய முக்கியமான பிரச்சனைகளுக்கு பதில் சொல்லாமல், தவிர்ப்பவர்களை நாம் என்ன செய்யமுடியும்; வேறு வழியில்லை. அப்படி தமிழ்நாட்டை தவிர்க்கக்கூடிய உங்களுக்கு மீண்டும் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்ற பதிலை தான் வருகின்ற தேர்தலில் நீங்கள் வழங்கிட வேண்டும் என்று இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன். கொங்கு கலைக்குழு சார்பில் நடைபெற்றிருக்கின்ற இந்த வள்ளிக்கும்மி கலை விழா, கலை வளர்ச்சிக்கும், அதன் மூலமாக, தமிழ் பண்பாட்டு வளர்ச்சிக்கும், தமிழர் ஒற்றுமையோடு இருக்கவேண்டும் என்ற அந்த உணர்வோடும் விளங்கிட வேண்டும் என்றும், எந்தவொரு கலையும், சமூக முன்னேற்றத்திற்கும், நல்லிணக்கத்திற்கும் துணையாக அமைய வேண்டும் என்றும் நான் உங்களையெல்லாம் இந்த நேரத்தில் கேட்டுக் கொண்டு, இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அதுவும் இவ்வளவு ஆயிரக்கணக்கான பெண்கள் திரண்டிருக்கக்கூடிய இந்தக் கூட்டத்தில் விரைவாக பேசிவிட்டு செல்வதற்கு என்னுடைய மனது கேட்கவில்லை.
நான் விமானத்தைப் பிடித்து இரவோடு இரவாக சென்னைக்கு செல்லவேண்டும். நாளைக்கு சட்டமன்றம் இருக்கிறது - எனக்கு மட்டுமல்ல, திரு. ஈஸ்வரனுக்கும் இருக்கிறது. அந்த கடமையும் நாங்கள் ஆற்றிடவேண்டும். எனவே, நீண்ட நேரம் உங்களிடத்தில் நின்று உரையாற்ற வாய்ப்பில்லை என்ற அந்த காரணத்தால், இந்த அளவில் நான் என்னுடைய உரையை நிறைவு செய்வதற்கு முன்பு, உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து விடைபெறுகிறேன்.
நன்றி, வணக்கம்.