அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு - முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்

0 MINNALKALVISEITHI

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.வெற்றிஅழகன் அவர்கள் “நான் முதல்வன்” திட்டம் குறித்துப் பாராட்டிப் பேசியதையடுத்து, அகில இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பாராட்டு தெரிவித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இங்கே எனக்கு முன்பு மாண்புமிகு உறுப்பினர் தம்பி வெற்றி அழகன் அவர்கள் மிக அழகாக, நிதானமாக பல்வேறு கருத்துக்களை எடுத்து வைத்து உரையாற்றியிருக்கிறார். அவர் பேசுகிறபோது, நான் முதல்வன் திட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, சில விவரங்களையெல்லாம் தெரிவித்தார்; சில விளக்கங்களைக் கேட்டார். எனவே, அதையொட்டி நான் சில செய்திகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழ்நாட்டு மாணவர்களின் திறனை வளர்க்க வேண்டுமென்ற நோக்கத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம்தான் 'நான் முதல்வன்' திட்டம். அந்தத் திட்டத்தின்கீழ் எடுக்கப்பட்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, தற்போது வெளியான அகில இந்திய குடிமைப் பணி தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்திருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி)

2016 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் அதிகமான தமிழ்நாட்டு மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலை மாறி 2021-ல் வெறும் 27 மாணவர்கள் மட்டும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இதை கவனத்தில் வைத்து, நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டது.

குடிமைப் பணி தேர்வுக்குத் தயாராகக்கூடிய ஆயிரம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு மாதம் 7500 ரூபாய் வீதம் பத்து மாதங்களுக்கு வழங்கினோம். மேலும், முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயாராகக்கூடிய மாணவர்களுக்கு ரொக்கமாக 25 ஆயிரம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினோம். அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'அகில இந்திய குடிமைப் பணி தேர்வு மையத்தின்' மூலமாக இந்த மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகள் எல்லாம் வழங்கப்பட்டிருக்கின்றன. நாம் மேற்கொண்ட தீவிரமான முயற்சிகளின் பயனாக, இந்த ஆண்டு தமிழ்நாட்டிலிருந்து 57 மாணவர்கள் பல்வேறு அகில இந்தியப் பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றார்கள். மேசையைத் தட்டும் ஒலி) இதில் கூடுதல் மகிழ்ச்சி என்னவென்றால், இவர்களில் 50 பேர் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்றுப் பயனடைந்திருக்கக்கூடியவர்கள் (மேசையைத் தட்டும் பலத்த ஒலி).

'நான் முதல்வன்' திட்டத்தின் போற்றத்தக்க இந்த வெற்றியினை நாம் தக்க வைத்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல், தேர்வில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த வேண்டும். அதற்காக சென்னையில் இருக்கக்கூடிய செனாய் நகர் பகுதியில் 500 மாணவர்கள் தங்கிப் பயிலக்கூடிய வகையில், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பயிற்சி மையம் 40 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் (மேசையைத் தட்டும் ஒலி என்பதை தங்கள் வாயிலாக இந்த அவையிலே நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதுமட்டுமல்ல; இந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஒரு பாராட்டு விழா நிகழ்ச்சியினை நாளை மறுதினம் அவர்கள் பயிற்சி பெற்ற அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரி வளாகத்தில் நடத்திடவும். அதில் நான் கலந்துகொள்ளவும் இருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கடைக்கோடித் தமிழ் இளைஞர்களின் கனவுகளையும் நனவாக்குவதே இந்த திராவிட மாடல் அரசின் முழுமுதற் கடமை! (மேசையைத் தட்டும் ஒலி) அதனை தொடர்ந்து செய்வோம் என்ற உறுதியினை அளித்து அமைகிறேன்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.