மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்
அவர்கள் இன்று (6.2.2025) திருநெல்வேலி, பாளையங்கோட்டை காந்தி தினசரி சந்தையில்
நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின்
சார்பில், மகாத்மா காந்தி தினசரி சந்தையில் 40 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில்
புதிதாக கட்டப்பட்டுள்ள வணிக வளாகம் மற்றும் காய்கனி சந்தை மற்றும் டவுன் நயினார்
குளம் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை 26 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தி
அமைக்கப்பட்டுள்ள சிறுவர் விளையாட்டு அரங்கம், என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம்
ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தார்.
மாநிலத்தின்
நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை மேம்படுத்துவதும், அனைத்து உள்ளாட்சி
அமைப்புகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதும், நகராட்சி நிர்வாகம்
மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முக்கிய கடமையாகும். நகர்ப்புர வசிப்பிடங்களில்
உள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தி மக்கள் சிறப்பாக வாழ தகுதியான
சூழ்நிலையை ஏற்படுத்திட, பாதாள சாக்கடைத் திட்டம், மழைநீர் வடிகால் திட்டம். சாலை
மேம்பாட்டுப் பணிகள், குடிநீர் வசதிகள், நகர்ப்புர ஏழைகளுக்கு குடியிருப்புகளை
ஏற்படுத்துதல், பூங்காக்களை அமைத்தல் போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு வளர்ச்சி
திட்டங்களை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், திருநெல்வேலி
மாநகராட்சியில் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் 10 கோடியே 22 இலட்சம் ரூபாய்
செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையில் வணிக வளாகம், 14 கோடியே 92 இலட்சம் ரூபாய்
செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையில் அபிவிருத்திப் பணிகள், 14 கோடியே 90
இலட்சம் ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தினசரி சந்தையினை மேம்படுத்தும் பணிகள், 14
கோடியே 97 இலட்சம் ரூபாய் செலவில் டவுன் பாரதியார் பள்ளி அருகில் சிறுவர்
விளையாட்டு அரங்கம், 11 கோடியே 3 இலட்சம் செலவில் டவுன் நயினார் குளம் தெற்கு
பகுதியை மேம்படுத்தும் பணிகள்: என மொத்தம் 66 கோடியே 4 இலட்சம் ரூபாய் மதிப்பிலான
முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம்
திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு.
துரைமுருகன் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு. கே.என். நேரு.
நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சி. ராபார்ட் புரூஸ், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.
எம். அப்துல் வகாப், திரு. ரூபி ஆர். மனோகரன், திரு. நயினார் நாகேந்திரன்,
சட்டப்பேரவை முன்னாள் தலைவர் திரு. இரா. ஆவுடையப்பன், திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்
தலைவர் டாக்டர் கே.பி. கார்த்திகேயன், இ.ஆ.ப., திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு.
கோ. ராமகிருஷ்ணன், துணை மேயர் திரு. கே.ஆர். ராஜூ, திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர்
டாக்டர் என்.ஓ. சுகபுத்ரா, இ.ஆ.ப.. உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும்
அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.