செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்.

0 MINNALKALVISEITHI
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி சிங்கபெருமாள்கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இயில்வே கடவு எண்.47க்குப்பதிலாக, புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார். 
மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள், கூடுவாஞ்சேரி சிங்கபெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே உள்ள இரயில்வே கடவு எண்.47க்கு பதிலாக, புதியதாக கட்டப்பட்ட சாலை மேம்பாலத்தை இன்று (19.02.2025) பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்கள். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோயில் திருப்பெரும்புதூர் சாலை புறநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாகும். இச்சாலையில் தினந்தோறும் இலட்சகணக்கான பொது மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பணியாளர்கள் மற்றும் மருத்துவமனைக்குச் செல்லும் நோயாளிகள் போன்றோர்களின் வாகனங்கள் இரயில்வேப் பாதையை கடந்து சென்றன. 

தினமும் பல முறை இரயில் அடிக்கடி செல்வதால், இரயில்வே கேட் மூடப்படுகின்றன. இதனால், பொது மக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வந்தனர். மேலும், ஒரகடம் சிப்காட் செல்லும் கனரக வாகனங்களும் இந்த இரயில்வே பாதை வழியாக சென்று வந்தன. இதனால், இந்த தேசிய நெடுஞ்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தன. கூடுவாஞ்சேரி சிங்கபெருமாள் கோயில் இரயில் நிலையங்களுக்கு இடையே சாலை மேம்பாலம் அமைக்கும் பணி, இரயில்வே திட்டப்பணிகள் 2006-2007ன்கீழ் எடுக்கப்பட்டது. இந்தப் பணிக்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடமிருந்து தடையில்லாச் சான்று கிடைக்கப்பெறாததால், 29.10.2014 அன்று பணிகள் முன் முடிவு செய்யப்பட்டது. பின்னர், மகாபலிபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை, சென்னை எல்லைச் சாலை அமைக்கும் பணி அறிவிக்கப்பட்டதால், இத்திட்டத்துடன் இருப்புப் பாதை கடவு எண்.47இல் மேம்பாலம் அமைக்கும் பணியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டு, பாலப்பணியில் அதற்குரிய வடிவ மாற்றங்கள் செய்யப்பட்டு. ரூ.138.27 கோடி மதிப்பீட்டில் மேம்பாலம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. 

திருப்பெரும்புதூர் பக்கம் மற்றும் செங்கல்பட்டு, சென்னை மார்க்கத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்காக, மாண்புமிகு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்கள் திறந்து வைத்தார்கள். இந்த திறப்பு விழாவில், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், தாம்பரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.எஸ்.ஆர்.இராஜா, செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு.ம.வரலெட்சுமி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசுச் செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ் இ.ஆ.ப., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் திரு. திரு.D.பாஸ்கரபாண்டியன் இ.ஆ.ப., சிறப்பு தொழில்நுட்ப அலுவலர் திரு.இரா.சந்திரசேகர் மற்றும் பகுதி பொறுப்பாளர்களும், துறைச் சார்ந்த அலுவலர்களும் உடனிருந்தனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.