"சிந்தனைச் சிற்பி" ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாள்-பிப்ரவரி 18 - திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

0 MINNALKALVISEITHI
"சிந்தனைச் சிற்பி" ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாள்-பிப்ரவரி 18| மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். 
"சிந்தனைச் சிற்பி" ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் 18.2.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். "சிந்தனைச் சிற்பி" ம.சிங்காரவேலர் அவர்கள். கடந்த 1860ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். 

மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றவர். ஏழை மக்களுக்காகச் சட்டம் பயின்றதோடு, அவர்களின் உரிமைக்காகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றினார். தமது இல்லத்திலேயே 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய பல புத்தகங்களைக் கொண்ட நூலகத்தினையும் அமைத்திருந்தார். 1918ஆம் ஆண்டு தமிழறிஞர் திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களால் தொடங்கப்பட்ட, "சென்னை தொழிலாளர் சங்கத்தில்" இணைந்து பணியாற்றினார். பொதுவுடைமைச் சிந்தனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மகத்தான பணிகளுக்காக, "சிந்தனைச் சிற்பி" என போற்றிப் புகழப்பட்டார். 1923ஆம் ஆண்டு 'மே' 1 ஆம் நாள் இந்திய வரலாற்றில் முதன்முறையாக. செவ்வண்ணக் கொடியோடு தேசியக் கொடியினை ஏற்றி வைத்து 'மே' முதல் நாளைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடினார். 

பல்வேறு மொழிகளைக் கற்றுணர்ந்த போதும், தாய்மொழியாம் தமிழ்மொழிக் கொள்கையில் தளராத உறுதி கொண்டிருந்தவர் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்.சென்னை மாநகராட்சி உறுப்பினராகப் பதவியேற்ற போது தமிழில் உறுதிமொழி எடுத்துக் கொண்டதோடு. "உறுப்பினர்கள் அனைவரும் இனித் தமிழில்தான் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று தீர்மானம் கொண்டுவந்தார். தொழிலாளர்கள் நலனுக்காகத் தம்மையே அர்ப்பணித்துக் கொண்டவர் அவர். சுயமரியாதை, சமதர்மக் கொள்கையில் தளராத உறுதி கொண்டவராகவும் வாழ்ந்து வந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிக் காலத்தில், சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் திருவுருவச்சிலையானது 11.6.1998 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குச் 'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் மாளிகை' என்றும் பெயர் சூட்டப்பட்டது. "சிந்தனைச் சிற்பி" ம.சிங்காரவேலர் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசு மீனவர் வீட்டு வசதித் திட்டத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

2006 ஆம் ஆண்டு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. ம.சிங்காரவேலர் அவர்களின் பிறந்த நாளாகிய பிப்ரவரித் திங்கள் 18 ஆம் நாள் ஆண்டுதோறும் அரசு விழாவாகக் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் அவருடைய பிறந்த நாளன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்துச் சிறப்புச் செய்கிறார்கள். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு மேயர். நாடாளுமன்ற உறுப்பினர்கள். சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.