மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை முகாம்களை திட்டமிட்டு நடத்த வேண்டும் அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

0 MINNALKALVISEITHI
பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை திட்டமிட்டு நடத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தி உள்ளார். பரிசோதனை திட்டம் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- குழந்தைகள் உயிரிழப்பைத் தடுப்பதற்கான செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனாலும், குழந்தைகள் நோய்வாய்ப்படுதல் மற்றும் உயிரிழப்பை முழுமையாக தடுக்க ஆரம்ப நிலையில் பாதிப்புகளைக் கண்டறிந்து, குணப்படுத்த வேண்டியது அவசியமாகிறது. 

எனவே, பிறந்த குழந்தை முதல் 18 வயது வரை உள்ள அனைவருக்கும் 30 வகையான பாதிப்புகள் ஏதேனும் உள்ளதா? என்பதை தொடக்கத்திலேயே கண்டறியும் தேசிய குழந்தைகள் நல மருத்துவப் பரிசோதனை திட்டம் (ஆர்.பி.எஸ்.கே.) தமிழகத்தில் விரிவாக நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த பரிசோதனை திட்டத்தின் மூலம் குழந்தையின் பிறவியிலேயே உள்ள பாதிப்புகள், பிறந்த பிறகு ஏற்படும் குறைபாடுகள், நோய்கள், வளர்ச்சிக் குறைபாடுகள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது. பரிசோதனை முகாம் ஒவ்வொரு ஆண்டும் 1.45 கோடி குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கு பள்ளிகளிலேயே 6 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. 

அவ்வாறு கடந்த ஆண்டு நடைபெற்ற பரிசோதனைகளில் 4.35 லட்சம் குழந்தைகளுக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்களில் 1.14 லட்சம் குழந்தைகள் மாவட்ட ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். மற்றவர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ அதிகாரி, நர்சு, மருந்தாளுநர் உள்ளடக்கிய 805 மருத்துவக் குழுவினர் இதற்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். 

எனவே, மருத்துவ குழுவினர் அனைவரும் பள்ளிகளில் மேற்கொள்ளப்படும் மருத்துவப் பரிசோதனை முகாம்களை முன்கூட்டியே திட்டமிட வேண்டும். இது அடுத்த இளம் தலைமுறைக்கு முக்கியமானதாக உள்ளது. மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், சமூகநலத்துறையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்ட அளவிலான கண்காணிப்புகளை நாள்தோறும் பதிவு செய்துகொள்ள வேண்டும். எனவே, பள்ளி மாணவர்களுக்கான உடல் நலன் திட்டம் முறையாக செயல்படுவதை மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.