அய்யன் திருவள்ளுவர் சிலைக்கு வெள்ளி விழா!

0 MINNALKALVISEITHI
‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று பாடினார், மகாகவி பாரதியார். ‘திருக்குறளை அதன் மூல வடிவில் படிப்பதற்காக நான் தமிழை படிக்க விரும்புகிறேன்’ என்றார், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள். ‘திருக்குறளை ஞான திருவிளக்கு’ என்றார், வீரமா முனிவர். ‘எல்லா நூல்களையும் விட சிறந்தது திருக்குறள்’ என்றார், ஜி.யு.போப். ‘திருக்குறளின் பெருமை தெரியாதவரை நான் மதிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை’ என்றார், சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சி. ஏன் பிரதமர் நரேந்திர மோடியும், தான் கலந்துகொள்ளும் சர்வதேச மாநாடுகளிலும், கூட்டங்களிலும் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசுவதுண்டு. எல்லாவற்றுக்கும் மேலாக மறைந்த கலைஞர் கருணாநிதி, ‘திருவள்ளுவரே தனது உலகம். அவர் எழுதிய திருக்குறளே தனது வாழ்க்கை’ என்று வாழ்ந்தார். 

பள்ளி மாணவனாக கருணாநிதி இருந்தபோது நடந்த பேச்சுப்போட்டியில், ‘நட்பு’ என்ற தலைப்பில் பேசும்போது திருக்குறளைத்தான் மேற்கோள் காட்டி பேசியிருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே சட்டமன்றத்தில் வாதாடி, சட்டசபையில் திருவள்ளுவர் படம் வைக்க வைத்தவர் அவரே. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது அனைத்து பஸ்களிலும் திருக்குறள் எழுதப்படவேண்டும் என்று உத்தரவிட்டு செயல்படுத்தினார். பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தபோது, அனைத்து அரசு விடுதிகளிலும் திருவள்ளுவர் படமும், திருக்குறளும் இடம்பெறச் செய்தார். காவலர் பதக்கங்களில் வள்ளுவர் உருவத்தை பொறித்தார். மயிலாப்பூரில் நினைவாலயம் அமைத்தார். சென்னையில் இன்று எல்லோரும் வியக்கும் வள்ளுவர் கோட்டத்தை அமைத்தார். அவரது எழுத்தில் குறளோவியமும், திருக்குறளின் உரையும் ஒளி வீசுகின்றன. வள்ளுவரை அய்யன் திருவள்ளுவர் என்று அனைவரையும் கூற வைத்தவர் கருணாநிதிதான். 

திருவள்ளுவருக்கு கன்னியாகுமரி கடலில் வானுயர்ந்த சிலை அமைக்கவேண்டும் என்று 1975-ம் ஆண்டு முடிவு செய்து, திருக்குறளின் 133 அதிகாரங்களை குறிக்கும் வகையில், 133 அடி உயரத்தில் கடலின் நடுவே பாறை மீது அமைக்கவும், அறத்துப்பாலில் உள்ள 38 அதிகாரங்களை மனதில் கொண்டு 38 அடி உயரத்தில் சிலையின் பீடமும் அமைக்கப்பட்டது. அது அறப்பீடம் என்று அழைக்கப்படுகிறது. மீதம் உள்ள 95 அடிதான் சிலையின் உயரம். அந்த சிலையின் முகம் மட்டும் 20 அடியாகும். கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடலில் பாறை மீது 133 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சி அளிக்கும் திருவள்ளுவர் சிலையை 1-1-2000 அன்று அப்போது முதல்-அமைச்சராக இருந்த கருணாநிதி திறந்துவைத்தார். இந்த சிலை எத்தனையோ பேரிடரின்போதும், குறிப்பாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமியின்போது கூட எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. 

இந்த சிலை அமைக்கப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதையொட்டி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் தந்தையின் அடியொற்றி 3 நாட்கள் வெள்ளி விழா எடுத்தார். நீங்கா புகழ்கொண்ட திருக்குறளை நமக்கு தந்த திருவள்ளுவருக்கு இந்த சிலை ஒரு நினைவாலயம் ஆகும். எப்படி அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலை உலகை அறிவூட்டும் சிலை எனப்படுகிறதோ, அதுபோல குமரிக்கடலில் எழுந்திருக்கிற வள்ளுவர் சிலை பேரறிவு சிலையாக புகழ்பரப்புகிறது. முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் வான் உயர்ந்து நிற்கும் வள்ளுவர் சிலையை பார்த்து, அவரின் சிறப்புகளை அறிந்துகொள்ள இந்த சிலை தூண்டுகோலாக இருக்கிறது.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.