நேரடி முதுகலை பட்டப்படிப்புக்காக பெற்ற ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு - Minnalkalviseithi

Latest

Saturday, 7 November 2026

நேரடி முதுகலை பட்டப்படிப்புக்காக பெற்ற ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு

 நேரடி முதுகலை பட்டப்படிப்புக்காக பெற்ற ஊக்க ஊதியத்தை திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற நோட்டீசுக்கு தடை ஐகோர்ட்டு உத்தரவு 


நேரடியாக பெற்ற முதுகலை பட்டப்படிப்பின் அடிப்படையில் பெற்ற ஊக்க ஊதியத்தை திரும்ப செலுத்தும்படி தலைமை ஆசிரியருக்கு பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

ஊதிய உயர்வு 

சென்னை ஐகோர்ட்டில், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.கலா என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘1996-ம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக பணியில் சேர்ந்து பதவி உயர்வு பெற்று, திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, பெரம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். தொலைதூரக் கல்வி மூலம் 2001-ம் ஆண்டு நேரடியாக எம்.ஏ., வரலாறு பட்டம் பெற்றேன். 2003-ம் ஆண்டு பி.லிட் பட்டமும், 2012-ம் ஆண்டு பி.எட் பட்டமும் பெற்றுள்ளேன். 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் உயர் கல்வித்தகுதி பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைப்படி, எம்.ஏ., பட்டமேற்படிப்பு பட்டம் பெற்றதற்காக எனக்கு கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 29-ந்தேதி முதல் இரண்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. 

திருப்பிச் செலுத்த வேண்டும் 

இந்நிலையில், இளங்கலை பட்டம் பெறாமல், நேரடியாக தொலைதூர பல்கலைக்கழகங்கள் மூலம் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் நடைமுறையை ரத்து செய்து தமிழ்நாடு அரசு கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 10-ந்தேதி அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து, எனக்கு 2012-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்ட ஊக்க ஊதிய தொகை ரூ.8.34 லட்சத்தை திருப்பிச் செலுத்தும்படி பள்ளிக்கல்வித்துறை இயக்குனர், நீடாமங்கலம் வட்டார கல்வி அலுவலர் ஆகியோர் உத்தரவிட்டனர். இந்த உத்தரவை ரத்து செய்யவேண்டும். தடை விதிக்கவேண்டும்'' என்று கூறியிருந்தார். 

இடைக்கால தடை 

இந்த மனு நீதிபதி மும்முனேனி சுதீர்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது, மனுதாரர் தரப்பில் வக்கீல் வி.காசிநாதபாரதி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதி, ‘‘இந்த மனுவுக்கு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உள்ளிட்டோர் பதில் அளிக்கவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன். மனுதாரருக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியம் ரூ.8.34 லட்சத்தை திருப்பி வசூலிக்க வேண்டும் என்ற பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கிறேன். விசாரணையை டிசம்பர் 3-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment