சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் - முதலமைச்சர் திரு. ச. பா. விஜய் - Minnalkalviseithi

Latest

Saturday, 5 September 2026

சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் - முதலமைச்சர் திரு. ச. பா. விஜய்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. பா. விஜய் அவர்கள் இன்று (3.9.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் விதி எண் 110-இன் கீழ், சென்னையில் நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் அமைப்பது தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பு.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

புனித ஜார்ஜ் கோட்டையானது கிழக்கிந்திய கம்பெனியால் 1640-ஆம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்திற்காக வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டு 1644-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 1652-ல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமையிடமாகத் திகழ்ந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஏறத்தாழ நானூறு ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிருவாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கிவருகிறது. சுமார் 107 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட இவ்வளாகத்தில், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின்கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் நான்கு ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது. மீதமுள்ள நிலப்பரப்பு இந்தியப் பாதுகாப்புத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டின்கீழ் இருப்பதால், இவ்வளாகத்தை விரிவுபடுத்தவோ, மேம்படுத்தவோ முடியவில்லை.

தற்போது தலைமைச் செயலகம் இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.

தலைமைச் செயலகப் பிரதான கட்டிடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை, ஆளுநரின் இருப்பிடமாகக் கட்டப்பட்ட இக்கட்டடம் தற்போது சட்டமன்றம், மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர் அறைகள், நிதித்துறை மற்றும் பிற முக்கியத் துறைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன. இவ்வளாகம் 2 இலட்சத்து 7 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

மாநில அரசின் விரிவடைந்துவரும் நிருவாகத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் நோக்கில், நாமக்கல் கவிஞர் மாளிகை 1978-ஆம் ஆண்டு 3 இலட்சத்து 75 ஆயிரம் சதுரடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டது. இக்கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகளின் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் 6,000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனை கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. பின்னர், அக்கட்டடமானது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டு காலங்களில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசுத் துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கையும், நிருவாகப் பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன. இருப்பினும், தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்கநிலையை அடைந்துள்ளது.

மேலும், புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள மீதமுள்ள இடங்கள் Defence மற்றும் ASI நிலமாக இருப்பதால் கூடுதல் கட்டடங்களும் மேம்பாட்டுப் பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை.

புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிருவாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிருவாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும், உலகத்தரத்திலான பொது நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும் ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலக வளாகம் அமைப்பது இன்றியமையாதது.

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் அனைத்து அரசுத் துறைகளையும் ஒரே நிருவாக வளாகத்தில் கொண்டுவந்து ஒருங்கிணைக்கப்படும்.

தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமைக் கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும். போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகள் ஏற்படுத்தப்படும்.

புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியக் கட்டடங்களை வரலாற்று மரபுச் சின்னங்களாகப் பாதுகாத்து, அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்காலத் தலைமுறைகளுக்கு அறியும் வகையில் உருவாக்கப்படும்.

இவற்றைக் கருத்தில்கொண்டு அடுத்த நூறாண்டுகளின் தேவையைப் பூர்த்திசெய்யும் வகையில், நவீன வசதிகளுடன்கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.


No comments:

Post a Comment