கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் வருவாய் மேம்பாட்டுக் குழு கலந்தாலோசனைக் கூட்டம் - 2026 - Minnalkalviseithi

Latest

Friday, 28 August 2026

கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் வருவாய் மேம்பாட்டுக் குழு கலந்தாலோசனைக் கூட்டம் - 2026

வர்த்தக மற்றும் தொழில் சங்கங்கள், பொதுநிதி மேலாண்மை வல்லுநர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுடன் வருவாய் மேம்பாட்டுக் குழு கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 
மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைப்பதற்காக, திரு. மாண்டேக் சிங் அலுவாலியா அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள வருவாய் மேம்பாட்டுக் குழு, இன்று 27.08.2026 சென்னையில், வர்த்தக மற்றும் தொழில் சங்கங்கள், பொதுநிதி மேலாண்மை வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களுடன் கலந்தாலோசனைக் கூட்டத்தை நடத்தியது. கூட்டத்தில் உரையாற்றிய குழுவின் தலைவர், மாநிலத்தின் சொந்த வரி மற்றும் வரி அல்லாத வருவாயினை அதிகரிப்பதற்கு, அனைத்துத் தரப்பினரின் தொடர்ச்சியான பங்களிப்பும் அவசியம் என்றும், இத்தகைய கலந்தாலோசனைக் கூட்டங்களில் பகிர்ந்துகொள்ளப்படும், நடைமுறை அனுபவங்கள் மற்றும் களநிலை எதார்த்தங்கள் குழுவின் ஆய்விற்கு முக்கியப் பங்களிக்கும் என்றும் தெரிவித்தார். 

 மேலும், மாநிலத்தின் வருவாயில் பங்களிக்கும் பல்வேறு துறைகளிடமிருந்து ஏற்கனவே பெறப்பட்ட கருத்துகளுடன், இக்கலந்தாலோசனைக் கூட்டத்தில் பெறப்பட்ட பரிந்துரைகள் இணைத்து குழுவால் ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பிற்பகலில் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட துறைசார் வல்லுநர்களுடனும் குழு கலந்தாலோசனை நடத்தியது. அவர்கள், வருவாய் மேம்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். பொதுமக்களிடமிருந்து மின்னஞ்சல் வாயிலாக பெறப்பட்ட பரிந்துரைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆலோசனைகளின் ஒரு பகுதியாக பரிசீலிக்கப்படும் என்றும் குழுத் தலைவர் தெரிவித்தார். அரசு இணைச் செயலாளர், நிதித் துறை / ஒருங்கிணைப்பாளர், வருவாய் மேம்பாட்டுக் குழு. 

No comments:

Post a Comment