தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்!

0 MINNALKALVISEITHI

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (2.8.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்தார்.

"நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடக்க விழா

2025-26-ஆம் ஆண்டிற்கான மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மானியக் கோரிக்கையில், உயர் மருத்துவ சேவைகள் வழங்க ரூ.12.78 கோடி செலவில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் தொடங்கி வைத்தார். இந்த உயர் மருத்துவ சேவை சிறப்பு முகாமிற்கு ரூ.1,08,173 வீதம் மாநிலம் முழுவதும் மொத்தம் 1,256 முகாம்களுக்கு ரூ.13.58 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு வட்டாரத்திற்கு 3 முகாம்கள் வீதம், 388 வட்டாரங்களில் 1,164 முகாம்களும், ஒரு மண்டலத்திற்கு ஒரு முகாம் வீதம், பெருநகர சென்னை மாநகராட்சியில் 15 முகாம்களும். ஒரு மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 10 இலட்சம் மக்கள் தொகைக்கு அதிகமாக உள்ள 5 மாநகராட்சிகளில் 20 முகாம்களும், ஒரு மாநகராட்சிக்கு 3 முகாம்கள் வீதம் மக்கள் தொகை 10 இலட்சத்திற்கு குறைவாக உள்ள 19 மாநகராட்சிகளில் 57 முகாம்களும், என மொத்தம் 1.256 முகாம்கள் நடத்தப்படும்.

இம்முகாம்கள் சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த ஊரகப் பகுதிகள், குடிசைப் பகுதிகள். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு நடத்தப்பட உள்ளன. 40 வயதிற்கு மேற்பட்டோர், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மன நல பாதிப்புடையோர். இதய நோயாளிகள். கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், வளர்ச்சிக் குன்றிய குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் சமூக- பொருளாதார ரீதியில் பின்தங்கிய மக்களுக்கு இம்முகாம்களில் முன்னுரிமை வழங்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை உள்ளாட்சி அமைப்புகள், பள்ளிக்கல்வித் துறை, உயர் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை. தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை. மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

இம்முகாம்களில் இரத்த அழுத்த பரிசோதனை மற்றும் அனைத்து பயனாளிகளுக்கும் இரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு முழுமையான இரத்த அணுக்களின் எண்ணிக்கை, இரத்த சர்க்கரை அளவு, சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்யப்பட உள்ளன. மேலும், பொது மருத்துவ நிபுணரின் அறிவுறுத்தலின்படி ஈ.சி.ஜி. எக்கோ, எக்ஸ்ரே, ஸ்கேன். காசநோய் மற்றும் தொழுநோய் பரிசோதனைகள், பெண்களுக்கான கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோய் கண்டறியும் பரிசோதனைகளும் செய்யப்படவுள்ளன.

இம்முகாமில் பங்குகொள்ளும் பயனாளர்களுக்கு பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், இருதய மருத்துவம், எலும்பியல் மருத்துவம். நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், காது, மூக்கு மற்றும் தொண்டை மருத்துவம், மகப்பேறு மருத்துவம். இயன்முறை மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம். மன நல மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம். நுரையீரல் மருத்துவம் ஆகிய மருத்துவச் சேவைகள் மற்றும் இந்திய மருத்துவம் சார்ந்த ஆலோசனைகள் சிறப்பு மருத்துவ நிபுணர்களை கொண்டு வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட பரிசோதனைகள் மட்டுமின்றி, முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்கப்படும். இம்முகாம்களின் விரிவான தரவுத் தொகுப்பு, தொடர் கண்காணிப்பு மற்றும் பின்தொடர் சிகிச்சை நடவடிக்கைகள் நவீன சுகாதார மேலாண்மைத் தகவல் முறைமை (HMIS 3.0) வாயிலாக கண்காணிக்கப்படும். "நலம் காக்கும் ஸ்டாலின்" சிறப்பு மருத்துவ முகாமினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்து, முகாமில் பயனாளிகளுக்கு மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனைகளை பார்வையிட்டு, பயனாளிகளிடம் கலந்துரையாடினார். மேலும், "நலம் காக்கும் ஸ்டாலின்" முகாமில் அமைக்கப்பட்டுள்ள பொது மருத்துவம், இருதய மருத்துவம், இந்திய மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பிரிவுகளை பார்வையிட்டார். பின்னர். முகாமில் கலந்து கொண்ட பயனாளிகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலி கருவிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, காணொலி வாயிலாக மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்தச் சிறப்பு மருத்துவ முகாம்களில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற உறுப்பினர்கள். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், மாண்புமிகு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு.பி.கே. சேகர் பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி ஆர். பிரியா, சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. த. வேலு. மருத்துவர் நா. எழிலன், திரு. எபினேசர். திரு. வெற்றியழகன், திரு. அரவிந்த் ரமேஷ், திரு. ஜோசப் சாமுவேல், திரு. க. கணபதி, திரு. தாயகம் கவி, திரு.ஆர்.டி. சேகர். திரு. ஜெ. கருணாநிதி. திரு. பிரபாகரராஜா, திரு.வி.ஜி. ராஜேந்திரன், துணை மேயர் திரு. மு. மகேஷ் குமார், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில்குமார். இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் திரு.ஜெ. குமரகுருபரன், இ.ஆ.ப.. தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு. அ. அருண் தம்புராஜ், இ.ஆ.ப., இந்து குழும இயக்குநர் திரு.என். ராம், முன்னாள் அமைச்சர் திருமதி பூங்கோதை ஆலடி அருணா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.