சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் ரூ.18.44 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகள் மற்றும் ரூ.91.42 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகள்

0 MINNALKALVISEITHI

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ரூ.18.44 கோடி செலவில் 4 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.91.42 கோடி மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (1.8.2025) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம்

சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் செயல்படுத்தி வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற திட்டப் பணிகளின் விவரங்கள்

சோழிங்கநல்லூரின் பெரும்பாக்கத்தில் உள்ள பூங்காவில். 6.94 கோடி ரூபாய் செலவில் உட்புற இறகுபந்து அரங்கம், கைபந்து மற்றும் சிறிய கால்பந்து மைதானம், திறந்தவெளி அரங்கம், சிறார் விளையாட்டுப் பகுதி. யோகா தளம், நடைபாதை, பசுமை புல்வெளி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா:

வில்லிவாக்கம், பாடி மற்றும் வடபழனி ஆகிய மூன்று இடங்களிலுள்ள மேம்பாலங்களின் கீழ், திறந்தவெளி அரங்கம், நீருற்று, நடைபாதை, பூப்பந்தல், அலங்கார விளக்குகள், இருக்கை வசதிகள், பசுமையான புல்வெளிகள். வாகனம் நிறுத்துமிடங்கள் போன்ற பல்வேறு வசதிகளுடன் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின்கீழ் அழகுபடுத்தும் பணிகள்: என மொத்தம் 18 கோடியே 44 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.

அடிக்கல் நாட்டப்பட்ட புதிய திட்டப் பணிகளின் விவரங்கள்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, UPSC, TNPSC போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் படித்து பயன்பெறும் வகையில் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் சென்னையில் 30 முதல்வர் படைப்பகங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, முதல்வர் படைப்பகங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில், வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் அயனாவரம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி - ஜவகர் நகர், திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதியில் சுப்புராயன் தெரு. பக்தவச்சலம் பூங்கா, புதிய வெங்கடேசபுரம் மற்றும் மங்களபுரம், ஆர். கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் செரியன் நகர், மேயர் பாசுதேவ் தெரு மற்றும் தண்டையார்பேட்டை நெடுஞ்சாலை, இராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நூலகம், பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் எருக்கஞ்சேரி. எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் இராட்டிலர் தெரு மற்றும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் சண்முகம் சாலை ஆகிய 13 இடங்களில் 31.11 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முதல்வர் படைப்பகங்கள் அமைக்கும் பணிகள்:

திரு.வி.க. நகர் - ஏகாங்கிபுரம் மற்றும் மங்களபுரம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள்:

கன்னிகாபுரம், புளியந்தோப்பு, வெங்கடேசபுரம், ரெட்ஹில்ஸ் ஆகிய இடங்களிலுள்ள 6 அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளை 2.36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணிகள்:

இராயபுரம், பெரம்பூர் மற்றும் வால்டாக்ஸ் சாலை ஆகிய இடங்களில் 3.84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன கழிப்பிட வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கும் பணிகள்:

கோயம்பேட்டில், தமிழ்நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும் மற்றும் தனித்தன்மையை பறைசாற்றும் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாகவும் கைவண்ண அங்காடிகள், அரங்கங்கள், உணவருந்தும் கூடங்கள் மற்றும் பொது வசதிகளுடன் கூடிய கைவண்ணம் சதுக்கம் 32.66 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கும் பணிகள்.

சென்னை, மெரினா கலங்கரை விளக்கம் முதல் தீவுத்திடல் வரை 18.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாரம்பரிய வழித்தடத்தை பாதை அடையாளங்கள். தகவல் பலகைகள், தெரு விளக்குகள். பார்வை மேடைகள் மற்றும் நடைபாதைகளுடன் கூடிய தெரு வடிவமைப்பு மூலம் அழகுபடுத்தும் பணிகள்:

என மொத்தம் 91 கோடியே 42 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 புதிய திட்டப் பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான திரு.பி.கே.சேகர்பாபு, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி காகர்லா உஷா, இ.ஆ.ப., சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் திரு.கோ.பிரகாஷ், இ.ஆ.ப., முதன்மை செயல் அலுவலர் திரு. அ.சிவஞானம், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.