மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (30.7.2025) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற தமிழ்நாட்டின் புத்தமை (IN2TN) அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டில் ஆற்றிய உரை
தமிழ்நாட்டின் புத்தமை அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாட்டினை தொடங்கி வைப்பதில் நான் பெருமையடைகின்றேன். மகிழ்ச்சியடைகின்றேன். திராவிட இயக்கம் எப்போதும் புதிய தொழில்நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது. திமுக ஆட்சியில் இருந்த போதெல்லாம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் கொண்டு சென்று அவர்கள் பயன்பெற தொடர்ந்து பாடுபட்டுள்ளது.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குத் தலைமைதான் டிஜிட்டல் சகாப்தத்தில் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு அடித்தளமிட்டது. அந்த காலகட்டத்தில் துணிச்சலான மற்றும் முற்போக்கான மாநில தகவல் தொழில்நுட்பக் கொள்கையை அறிமுகப்படுத்திய இந்தியாவின் முதல் முதலமைச்சர் அவர்தான்.
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பள்ளிகளில் கணினி கல்வியை கொண்டு வந்ததுடன், டைடல் பூங்காக்களை நிறுவி இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றி அமைத்து ஒளிரச்செய்தார். டாக்டர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வை மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளதுள்ளதுடன் இன்று நாம் காணும் தகவல் தொழில் நுட்பவியல் முன்னேற்றத்தை தொடர்ந்து வடிவமைத்து வருகிறது.
டாக்டர் கலைஞர் அவர்களைப் பின்பற்றி, நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்பத்தில் ஒரு முன்னணி மாநிலமாக மாற்றியுள்ளார். அவரது தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், நமது திராவிட மாடல் அரசு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் புதிய அளவுகோல்களை அமைத்து, முன்னேற்றத்தை ஏற்படுத்தும் பாதையை உருவாக்கி வருகிறது.
