காலம்தோறும் கம்யூனிஸ்டுகள் நூல் வெளியீட்டு விழா - அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு

0 MINNALKALVISEITHI

இன்று (28.7.2025) சென்னை, காமராசர் அரங்கில் நடைபெற்ற கவிஞர் திரு. ஜீவபாரதி அவர்கள் எழுதியுள்ள "காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்" நூல் வெளியீட்டு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் வாழ்த்துச் செய்தியினை மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் திரு. தங்கம்தென்னரசு அவர்கள் வாசித்தார்

கவிஞர் திரு. ஜீவபாரதி அவர்கள் எழுதியுள்ள "காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்" என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று தோழர் திரு. முத்தரசன் அவர்கள் தேதி கேட்டபோது, "தங்களுக்கு இல்லாத தேதியா?" என்று கூறி உடனடியாக நிகழ்ச்சிக்கு வர ஒப்புதல் அளித்தேன். ஆனால், மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி சிறப்பான இந்த நிகழ்ச்சியில் பங்கெடுக்க இயலவில்லை என்பது வருத்தமளிக்கிறது.

பொதுவுடைமைக் கருத்தியல் என்பது மானுடத்திற்கான மறுக்க முடியாத கருத்தியல் விழுமியம் என்பதோடு, நமது மண்ணுக்கும் மக்களுக்கும் அதன் தேவை மிகவும் இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது. அதை உணர்ந்ததால்தான் முத்தமிழறிஞர் கலைஞரின் எழுத்திலும், அரசியல் அணுகுமுறைகளிலும் அதன் சுவடுகள் அழுத்தமாகவே பதிந்திருந்தன. அந்த உணர்வோடுதான் "தந்தை பெரியாரையும், பேரறிஞர் அண்ணாவையும் சந்திக்காமல் போயிருந்தால் நானும் ஒரு கம்யூனிஸ்டாகத்தான் இருந்திருப்பேன்" என்று அவர் அடிக்கடி கூறினார்.

அது வெறும் அலங்காரக் கூற்றல்ல என்பதற்கான சான்றுதான் 1956-ஆம் ஆண்டு நங்கவரத்தில் அவர் நடத்திய போராட்டமும், அதற்கு மக்கள் மத்தியில் கிடைத்த அமோக ஆதரவும்!

அதே உணர்வோடுதான். பின்னாளில் முதலமைச்சராகப் பதவியேற்றபோது, உழுபவருக்கே நிலம் சொந்தம், நில உச்சவரம்புச் சட்டங்களை நடைமுறைப்படுத்தினார். பொதுவுடைமைக் கருத்தை வெறும் அரசியலாக மட்டுமின்றி, மக்களின் வாழ்க்கையினையே மேம்படுத்துவதற்கான கருவியாக, சட்டத்தின் கூறுகளாக மாற்றிச் செயல்படுத்துவதுதான் அவரது ஆட்சிமுறையாகவே இருந்தது. குடிசைமாற்று வாரியம், கை ரிக்சா ஒழிப்பு உள்ளிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான அரசால் கொண்டு வரப்பட்ட திட்டங்களெல்லாம் பொதுவுடைமைச் சிந்தனையின் செயல்வடிவங்களே!

அவரது வழியில்தான் நமது திராவிட மாடல் அரசும் தவறாமல் பயணித்து வருகிறது. இடதுசாரி இயக்கங்கள் மீதும், தலைவர்கள் மீதும் நான் கொண்டிருக்கும் பேரன்பும், பெரும் பாசமும் நாடறிந்த ஒன்று. பல விழாக்களில் முதுபெரும் தோழர் திரு. மணலி கந்தசாமி அவர்களின் கருத்துகளை மேற்கோள் காட்டி நான் பேசுவதை நீங்கள் அறிவீர்கள். பொதுவுடைமைத் தத்துவத்தை உலகுக்குத் தந்த மாமேதை கார்ல் மார்க்ஸ் அவர்களின் சிலை சென்னையில் நிறுவப்படும் என்று அறிவித்து அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சமத்துவம், சமதர்மத்தின் கம்பீர அடையாளமாக கார்ல் மார்க்ஸின் சிலை சென்னையில் நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற எனது ஆவலின் வெளிப்பாடே அது!

அதுமட்டுமின்றி, நமது திராவிட மாடல் அரசு ஏழை, எளிய மக்களின் நலன்களுக்காகப் புதிய புதிய திட்டங்களை நாள்தோறும் செயல்படுத்தி வருவதையும் கண்கூடாகப் பார்த்து வருகிறீர்கள். விடியல் பயணம் திட்டம். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண் திட்டம். தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்பட சமூகத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், "எல்லார்க்கும் எல்லாம்" என்ற பொதுவுடைமைக் கருத்தியலை நடைமுறை வாழ்வியலாக மாற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் திராவிட மாடல் அரசு எடுத்து வருகிறது என்பதில் எனக்கு பெருமிதம் உண்டு!

இந்தியச் சமூக அமைப்பைப் பொறுத்தவரை அதிகார விடுதலை மட்டும் போதாது, வர்க்க விடுதலையும், சமூகவிடுதலையும் இணைந்ததாக இருந்தால்தான் அது முழுமையானதாக இருக்கும் என்ற அன்றைய பொதுவுடைமைத் தலைவர்களின் கருத்தும். சமூகநீதி இயக்கமாக வழிவந்த திராவிட இயக்க முன்னோடிகளின் சிந்தனையும் எத்தனை தீர்க்கமானது என்பதை இன்றுவரை அனுபவரீதியாக உணர்ந்து வருகிறோம்.

அதனால்தான், பொதுவுடைமை இயக்கமும்; திராவிட இயக்கமும் இந்த இருபெரும் விடுதலைக்காக இரட்டைக் குழல் துப்பாக்கிளாக இன்றுவரை இயங்கி வருவதையும் நாம் அறிவோம்.

இத்தகைய ஆழமான வரலாற்று உண்மையை. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னெடுப்புடன் கவிஞர் திரு. ஜீவபாரதி அவர்கள் வடித்துள்ள இந்நூல், இந்த மண்ணின் சிந்தனையைச் சிவப்பாக்கிய தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் தோழர் சிங்காரவேலர்' முதல் 'மேடைத் தமிழுக்கு மேன்மை சேர்த்த தா.பாண்டியன்' வரையிலான நூறு கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை

இரு பாகங்களாக இன்றைய தலைமுறைக்கு எடுத்து இயம்புகிறது.

தோழர்கள் சங்கரய்யா, நல்லகண்ணு போன்று இன்றைய தலைமுறையினர் பார்த்து வியந்த தலைவர்கள் முதல், தோழர்கள் பி.சீனிவாசராவ், பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம், பாலதண்டாயுதம், மணலி கந்தசாமி போன்ற பிரபலமான முந்தைய தலைவர்களின் வரலாறும், கம்யூனிஸ்ட் தோழர்கள் மட்டுமே அறிந்த இயக்கத்தின் வேரில் ரத்தம் சொரிந்து செவ்வியக்கம் வளர்த்த செம்மல்கள் பலரின் தியாகவாழ்வின் சிறப்பும் இந்நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நூல் பொதுவுடைமை இயக்கத்திற்கு மட்டுமின்றி, பொதுச் சமூகத்திற்கும் வழிகாட்டக் கூடிய மிகப்பெரிய ஆவணமாக இருக்கும் என்பதில் அய்யமில்லை. இந்தத் தருணத்தில், இந்த நூலில் இடம்பெற்றுள்ள பொதுவுடைமை இயக்கம் குறித்த கருத்துகளையும், கம்யூனிஸ்ட் தலைவர்களின் தியாகமிகு வாழ்வு குறித்த தகவல்களையும் இன்றைய தலைமுறையினரும் அறிந்திடும் வகையில், சமூக ஊடகங்கள் மூலம் பரப்பிட ஆவன செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நூலை உருவாக்க வழிவகுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் திரு. முத்தரசன் அவர்களுக்கும், கடுமையாக உழைத்து தகவல்களைப் பதிவு செய்திருக்கும் கவிஞர் திரு. ஜீவபாரதி அவர்களுக்கும், அவருக்கு உதவிய மற்ற தோழர்களுக்கும் எனது பாராட்டுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

'காலம்தோறும் கம்யூனிஸ்டுகள்' நூலின் வெளியீட்டு விழா சிறக்கவும். அனைவரின் சிந்தனைக்கு விருந்தாகச் சென்று சேரவும் எனது உளமார்ந்த வாழ்த்துகள்!

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.