மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் திரு. நம்பெருமாள்சாமி மறைவு

0 MINNALKALVISEITHI

மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவர் திரு. நம்பெருமாள்சாமி மறைவையொட்டி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் இரங்கல் செய்தி

புகழ்பெற்ற மருத்துவரும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் மதிப்புறு தலைவருமான 'பத்மஸ்ரீ' திரு. நம்பெருமாள்சாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வேதனையுற்றேன்.

தென் தமிழ்நாட்டில் மிக எளிய வேளாண் குடும்பத்தில் பிறந்து. மதுரை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பையும், அமெரிக்காவில் மேல்படிப்பையும் முடித்து இந்தியாவின் முதல் விழித்திரை சிறப்பு மருத்துவர் என்ற பெயர் பெற்றவர் திரு. நம்பெருமாள்சாமி அவர்கள்.

ஏழை எளியோருக்கும் கண்மருத்துவம் கிடைக்க வேண்டும். கண்பார்வைக் குறைபாட்டை நீக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தொடங்கப்பட்ட அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர்களில் ஒருவர் மருத்துவர் நம்பெருமாள்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.

இலட்சக்கணக்கான மக்களுக்குக் கண்பார்வை அளித்த திரு. நம்பெருமாள்சாமி அவர்களின் சேவைக்கு அங்கீகாரமாக உலகப் புகழ்பெற்ற டைம் இதழ், உலகின் செல்வாக்கு மிகுந்த 100 நபர்களில் ஒருவராகவும் இவரைத் தேர்வு செய்திருந்தது.

திரு. நம்பெருமாள்சாமி அவர்களிடம் பயின்ற நூற்றுக்கணக்கான மாணவர்களும் மருத்துவர்களாகி அவரது வழியில், ஏழை எளிய மக்களுக்குக் கண் சிகிச்சை அளித்து வருகின்றனர் என்ற வகையில் இத்துறையில் அவர் புரிந்துள்ள சாதனை காலத்தால் அழியாதது.

பல இலட்சம் பேருக்கு பார்வையளித்த மருத்துவர் நம்பெருமாள்சாமி அவர்களின் மறைவு பேரிழப்பாகும். மருத்துவத்துறைக்கும் மதுரை மக்களுக்கும்

அன்னாரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினர், மருத்துவத்துறை நண்பர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.