சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்

0 MINNALKALVISEITHI

சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் இன்று (3.7.2025) தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக சென்னை, தரமணியில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் சார்பில் தமிழ் மக்களுக்கான பண்பாட்டுத் தலமாகச் செயல்படவிருக்கும் "தமிழ் அறிவு வளாகம்" (Tamil Knowledge Campus) கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டி. பணியினை தொடங்கி வைத்தார்.

1994ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை மீள்கட்டமைக்கும் செயல்பாடுகளையும் இந்நூலகம் மேற்கொண்டு வருகிறது.

இதனை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் நோக்குடன், தமிழ் அறிவு வளாகத்தை உருவாக்கும் வகையில் சென்னை, தரமணியில் உள்ள தொழில்நுட்ப வளாகத்தில் 30,000 சதுர அடி நிலத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. இத்திட்டம் இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்தப்படும். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம் ஆகியவை இவ்வளாகத்தில் முக்கிய அங்கங்களாகும். இதற்கான மொத்தக் கட்டுமான செலவு 40 கோடி ரூபாய் ஆகும். தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் நல்லுலகத்தின் பல்வேறு அமைப்புகள். நிறுவனங்கள். புரவலர்கள் உதவியுடன் இத்திட்டத்திற்கான கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் திரு. துரைமுருகன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம். இ.ஆ.ப., மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர்கள் திரு.ஆர்.பாலகிருஷ்ணன்.இ.ஆ.ப.(ஓய்வு), திருமதி. மரியம் ராம், திரு. ஆர். ராமசந்திரன், திரு. இந்திரன். திரு. சுந்தர் கணேசன், கட்டட வடிவமைப்பாளர் திரு. பி. ராஜேந்திரன், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத் திட்டப்பணி இயக்குநர் திரு. இரா. பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.