நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம்

0 MINNALKALVISEITHI
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, > நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டம் தொடக்கம் -மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் மனநல ஆலோசனை திட்டத்தினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்கள். 
மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் இன்று (16.06.2025) சென்னை, தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார்கள். பிறகு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் 104 மருத்துவ தகவல் மையம் தொடங்கி, நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டத்தை தொடர்ச்சியாக 4 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவப் பாடத்திற்கு இடம் கிடைக்காத மாணவர்களுக்கும் மனநல ஆலோசனைகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்விலும் கூட தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது. 104 ஆலோசனை மையத்தை பொறுத்தவரை, மனநல ஆலோசனைகள் வழங்குவது என்பதையும் கடந்து மாணவர்களுக்கு எதிர்கால கல்விக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகிறதோ, எதைப்படித்தால் வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறித்தான விளக்கங்கள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் 1,35,715 பேர். இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 76,181 பேர், தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேர். முதல் கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு 2 Shiftகள் என்கின்ற வகையில் இன்று மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 80 மனநல ஆலோசகர்கள் இந்த பயிற்சியினை தொடங்கி இருக்கிறார்கள். காலையில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தில் ஏறக்குறைய 600 மாணவ, மாணவியர்களை தொடர்பு கொண்டு பேசப்பட்டிருக்கிறது. அதில் 30% பேர் இணைப்பு கிடைக்கப் பெறாத நிலையில் இணைப்பு கிடைக்கப்பெற்ற 70% என்கின்ற வகையில் மாணவர்களோடு தொடர்பு கொள்ளப்பட்டிருக்கிறது. மாணவர்களிடத்தில் நீட் தேர்வு தேர்ச்சி பெற தவறியிருந்தாலும், அடுத்தடுத்த வாய்ப்புகள் இருக்கிறது. மீண்டும் இதே தேர்வு சந்திக்கும் நிலை இருக்கிறது. எனவே மனம் தளராமல் உங்களுடைய படிப்பை தொடர வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல் பெற்றோர்களிடத்திலும் கூட பிள்ளைகளிடம் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடாது. அதிகமாக கோபப்படகூடாது. குழந்தைகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தக் கூடாது என்று பெற்றோர்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று அந்தப் பயிற்சி தொடங்கப்பட்டிருக்கிறது. 59,534 பேர் இலக்கு என்கின்ற வகையில் இந்தப் பயிற்சி தொடங்கப்பட்டிருந்தாலும், தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 76,181 பேர், தேர்ச்சி பெற்ற இவர்களுக்கு மருத்துவ இளங்கலை படிப்புகளுக்கு மட்டும் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்பு. தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகள் என்று 75 இருக்கின்றது. இந்த 75 மருத்துவக்கல்லூரிகளிலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 பேருக்கு மட்டுமே. அதோடுமட்டுமல்லாமல் MBBS எனும் மருத்துவப் படிப்பைத் தொடர்ந்து வெவ்வேறு வாய்ப்புகளும் இருக்கிறது என்று அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000த்திற்கும் மேற்பட்ட படிப்புகளில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது. இதோடுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவம் போன்ற பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. அதோடு மருத்துவத்துறையிலேயே இந்திய மருத்துவம் என்று சொல்லக்கூடிய சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் நீங்கள் தொடரலாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12ஆம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய யோகா போன்ற பட்டப்படிப்புகள் இருக்கின்றது. எனவே மாணவர்களின் மனநலனை இன்றைக்கு திடப்படுத்திடும் வகையில் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகள் அவர்களுக்கு அறிவித்திடும்வகையிலும் ஒரு முயற்சியாக மனநல ஆலோசனை பயிற்சி தொடங்கப்படுகிறது. மேலும் மாணவர்களுக்கு எந்த மாதிரியான மனநல ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளது என்றால் தனிமையை தவிர்த்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடத்திலிருந்து விலகி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி. தற்கொலை எண்ணம், தொடர்ந்து அழுதுக் கொண்டிருப்பது. அதிகமாக கோபம் கொண்டு அருகில் இருப்பவர்களிடம் பேசுவது என்று பயத்தோடு, பதற்றத்தோடு இருக்கும் மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அ அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தப் பயிற்சி பயன்படும் என்று மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள். இந்நிகழ்வில் ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மரு.எழிலன் நாகநாதன். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் ப.செந்தில்குமார். இ.ஆ.ப., தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், இ.ஆ.ப., தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் மரு.வினித், இ.ஆ.ப., பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் மரு.செல்வவிநாயகம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் மரு.இராஜமூர்த்தி மற்றும் உயரலுவலர்கள் உடனிருந்தனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.