மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் ஜுன் 25 அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

0 MINNALKALVISEITHI

மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் ஜுன் 25 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் 95ஆவது பிறந்த நாள் ஜுன் 25 அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை

தமிழ்நாடு அரசின் சார்பில், மேனாள் இந்தியப் பிரதமர் சமூகநீதிக் காவலர் விஸ்வநாத் பிரதாப் சிங் என்னும் திரு.வி.பி.சிங் அவர்களின் 95 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். 25.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

திரு.வி.பி.சிங் அவர்கள் 1931ஆம் ஆண்டு ஜுன் மாதம் 25ஆம் நாள் அலகாபாத் நகரில் அரச குடும்ப வாரிசாகப் பிறந்தார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் தமது பள்ளிப் படிப்பை முடித்த பின்பு, புனே பெர்குஷன் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார். மேலும், 1950ஆம் ஆண்டு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்று பட்டம் பெற்றார்.

திரு. வி.பி.சிங் அவர்கள் சட்டக் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, சர்வோதய சமாஜத்தில் இணைந்து, பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்துத் தமக்குச் சொந்தமான நிலங்கள் முழுவதையும் தானமாக வழங்கினார். 1969ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சட்டமன்ற உறுப்பினர். 1971 ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர். 1974 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மந்திரி சபையில் வர்த்தகத் துறை துணை அமைச்சர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார்.

1980 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடித்தட்டு மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நல்லத் திட்டங்களை கொண்டு வந்தார். திரு.வி.பி.சிங் அவர்கள் 1984 ஆம் ஆண்டு ஒன்றிய அரசின் நிதியமைச்சர் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய பதவிகளை வகித்தார். இதனைத் தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாட்டு மக்களின் வாழ்வதாரப் பிரச்சனையான காவிரிப் பிரச்சினைக்காக நடுவர் மன்றம் அமைத்தார். சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு, பெருந்தலைவர் காமராஜர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு, பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டினார். அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்குப் பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் "அரசியல் நாகரீகத்துககும். பண்பாட்டுக்கும். உயர்ந்த லட்சியங்களுக்கும் அடையாளச் சின்னமாக விளங்கியவர் வி.பி.சிங்" என்று கூறியுள்ளார்.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக திரு.B.P. மண்டல் அவர்கள் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தால் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரையைச் செயல்படுத்தியவர் சமூகநீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்கள்.

திரு.வி.பி.சிங் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, மாநிலக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரது திருவுருவச்சிலை 27.11.2023 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் திரு.வி.பி.சிங் அவர்களின் பிறந்த நாளான ஜுன் 25 ஆம் நாள் அரசு விழாவாக மிகச் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, 25.6.2025 அன்று மேனாள் இந்தியப் பிரதமர் சமூக நீதிக் காவலர் திரு.வி.பி. சிங் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். மாண்புமிகு மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.