டிஎன்பிஎஸ்சி வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்

0 MINNALKALVISEITHI

தொழில் வணிகத்துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.6.2025) தலைமைச் செயலகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தொழில் வணிகத் துறைக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும். வளர்ச்சிக்கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன.

தொழில் வணிகத் துறையானது சுய வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு திட்டங்கள். நிறுவனங்களை அமைக்க மற்றும் விரிவாக்கம் செய்வதற்கான மானியங்கள் போன்ற பல்வேறு திட்டங்களை தொழில்முனைவோரின் மூலம் தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்கும் வளர்ச்சிக்கும் வழங்கி பங்காற்றி வருகிறது. தொழில் வணிகத் துறை வாயிலாக கலைஞர் கைவினைத் திட்டம், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் போன்ற பல்வேறு சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தொழில் வணிகத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்ட்டு வருகின்றன. அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 19 இளநிலை உதவியாளர். 22 தட்டச்சர் மற்றும் 9 சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட மொத்தம் 50 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டன.

இந்த அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள்வரை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் 1 உதவி கண்காணிப்பாளர். 11 உதவி இயக்குநர்கள் 18 உதவி பொறியாளர்கள் 47 உதவியாளர்கள் 34 இளநிலை உதவியாளர்கள், 41 தட்டச்சர்கள் மற்றும் 25 சுருக்கெழுத்து தட்டச்சர்கள் ஆகிய பணியிடங்களுக்கு மொத்தம் 177 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின், மாண்புமிகு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன், தலைமைச் செயலாளர் திரு.நா.முருகானந்தம். இ.ஆ.ப., குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல் ஆனந்த், இ.ஆ.ப. தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் திரு.இல.நிர்மல் ராஜ், இ.ஆ.ப., ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.