தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாள் ஜூன் 26

0 MINNALKALVISEITHI

தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாள் ஜூன் 26 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாள் ஜூன் 26

தமிழ்நாடு அரசின் சார்பில், 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் அவர்களின் 120 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள். 26.6.2025 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.

'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் அவர்கள் சென்னை மயிலாப்பூரில் பொன்னுசாமி கிராமணியார் சிவகாமி அம்மாள் தம்பதியினருக்கு 26.6.1906 அன்று மகனாகப் பிறந்தார். அவர் சிறுவயது முதல் தமிழ் மொழி மீது கொண்ட தீராப் பற்றின் காரணமாகச் சிறந்த தமிழ் அறிஞராகத் திகழ்ந்தார். தான் பெற்ற அனுபவத்தாலும், சுய முயற்சியாலும் தமிழில் தக்க புலமையோடு செந்தமிழ்ச் செல்வராகவும், சிறந்த தலைவராகவும் விளங்கினார்.

கிராமணி குலம். தமிழ் முரசு, தமிழன் குரல், செங்கோல் ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் திகழ்ந்தார். சிலப்பதிகாரத்தை உலகறியச் செய்திட வேண்டும் என்கிற வேட்கையில், சிலப்பதிகார மாநாடுகள் பல நடத்தினார். சிலம்பின் மேல் இவர் கொண்டிருந்த காதலை அறிந்த சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள். நாகர்கோவிலில் நடந்த எழுத்தாளர் மாநாட்டில் 'சிலம்புச் செல்வர்' என்னும் பட்டத்தை ம.பொ.சிவஞானம் அவர்களுக்கு வழங்கினார்.

ம.பொ.சிவஞானம் அவர்கள் பத்திரிகை ஆசிரியர், பேச்சாளர் என்பதுடன் சிறந்த நூலாசிரியராகவும் திகழ்ந்தார். நூற்றுக்கும் மேலாக அவர் எழுதியுள்ள நூல்களில், கப்பலோட்டிய தமிழன். வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழன் குரல், வீரக் கண்ணகி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இந்திய விடுதலைப் போராட்டம் குறித்தும். விடுதலைப் போரில் தமிழ்நாட்டின் பங்களிப்பினைத் தொகுத்தும் "விடுதலைப் போரில் தமிழகம்" என்கிற நூலை எழுதியுள்ளார்.

சுதந்திரப் போராட்டத்தில் ஆறு முறையும். தமிழ்நாட்டின் வடக்கு எல்லைப் போராட்டத்தில் இரண்டு முறையும் சிறையில் அடைக்கப்பட்டார்.

அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திராவைப் பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைத்திட ஒன்றிய அரசு முடிவு செய்தது. அப்போது 'மதராஸ் மனதே' என்று ஆந்திரர்கள் சென்னைக்கு உரிமை கொண்டாடினர். ம.பொ.சி. அவர்கள் அதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்" என்று வீரமுழக்கமிட்டார். அன்று அவர் எழுப்பிய வீரமுழக்கம், தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் ஆகியவற்றின் பயனாக மதராஸ் சென்னை ஆந்திராவில் சேர்க்கப்படவில்லை. அதனால், ம.பொ.சி. 'தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல்' என அழைக்கப்பட்டார். அதேபோல ம.பொ.சிவஞானம் அவர்களின் தீவிர வடஎல்லைப் போராட்டத்தின் காரணமாக திருத்தணி ஆந்திரர்களின் ஆளுகைக்குச் சென்று விடாமல் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது.

"மெட்ராஸ் ஸ்டேட்" என அழைக்கப்பட்டு வந்த சென்னை மாகாணத்திற்கு "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும் என்றும் போராடினார்.

'சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்கள் சட்டமன்ற மேலவை உறுப்பினராக, சட்டமன்ற மேலவைத் தலைவராகத் திறம்படப் பணியாற்றியதோடு, தமிழ் வளர்ச்சி உயர்நிலைக் குழுவின் தலைவராகவும் செயலாற்றியுள்ளார்.

1966ஆம் ஆண்டு ம.பொ.சிவஞானம் அவர்கள் எழுதிய "வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு" என்கிற நூலுக்கு 'சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட்டதோடு, அன்னாரின் பொதுத்தொண்டினைப் பாராட்டி 1972ஆம் ஆண்டு ஒன்றிய அரசு பத்மஸ்ரீ விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

சிலம்புச் செல்வருக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அன்னாரின் நூற்றாண்டு விழாவைச் சிறப்புடன் கொண்டாடி, 2011 ஆம் ஆண்டு சென்னை. தியாகராய நகரில் தலைநகர் காத்த தமிழ்ச் செம்மல் ம.பொ.சிவஞானம் அவர்களின் திருவுருவச் சிலையைத் திறந்து வைத்தார்கள்.

ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் அவர்களின் பிறந்த நாள் விழா ஜூன் மாதம் 26ஆம் நாள் அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, 26.6.2025 அன்று காலை 9.30 மணியளவில். 'சிலம்புச் செல்வர்' ம.பொ.சிவஞானம் அவர்களின் 120ஆவது பிறந்தநாளில், அவரது திருவுருவச்சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். மாண்புமிகு மேயர், துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டு மாலையணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்திச் சிறப்பிக்கிறார்கள்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.