விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைக்கு 9.5.2025 அன்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்
தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை, கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் அமைந்துள்ள விடுதலைப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு, அவரது பெருமைகளைப் போற்றி மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் 9.5.2025 அன்று காலை 9.30 மணியளவில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மன், ஜெகவீர கட்டபொம்மு மற்றும் ஆறுமுகத்தம்மாள் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவர் முப்பது வயது வரை தந்தை ஜெகவீர கட்டபொம்மு பாளையக்காரராக இருந்து வந்ததால் தந்தைக்கு உதவியாக இருந்தார். அவருக்குப்பின் கட்டபொம்மன் 1790-ஆம் ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி, 47வது பாளையக்காரராகப் பொறுப்பேற்றார்.
வீரபாண்டிய கட்டபொம்மனிடம் வரி கேட்டு வந்த வெள்ளையர்களை எதிர்த்து வரி கொடுக்க மறுத்தார். அதனால் ஏற்பட்ட பகைக்காரணமாக வெள்ளையருடன் போரிட்டு இறுதியில் ஆங்கிலேயத் தளபதி பானர்மென் உத்தரவின்படி, அக்டோபர் 16ஆம் தேதி, 1799 ஆம் ஆண்டில் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனின் தியாகத்தைப் போற்றி, அழிக்கப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் கோட்டையை பாஞ்சாலங்குறிச்சியில் மீண்டும் 4 ( 18.8.1974 அன்று திறந்துவைத்தார். அத்துடன் கட்டபொம்மனின் 204 வழித்தோன்றல்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்து நிலப்பட்டா, மனைப்பட்டாக்களையும் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் 14.4.2023 அன்று கட்டபொம்மன் திருவுருவச் சிலையை அமைத்து, "வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக உரத்த குரல் எழுப்பிய போர் மறவன் வீரபாண்டிய கட்டபொம்மன்" எனக் கல்வெட்டில் பொறித்துப் பாராட்டியுள்ளார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் தூத்துக்குடி மாவட்டம். பாஞ்சாலங்குறிச்சியிலும், சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்திலும் அமைக்கப்பட்டுள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைகளுக்கு, அவரது வீர உணர்வுகளைப் போற்றி ஆண்டுதோறும் சிறப்புகள் செய்யப்படுகின்றன.
அதன்படி, இந்த ஆண்டின் சித்திரைத் திங்கள் கடைசி வெள்ளிக்கிழமையான 9.5.2025 அன்று காலை வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலைகளுக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மேயர். நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள். துணை மேயர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்திச் சிறப்பிக்கிறார்கள்.