முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம், மதுரை முருங்கை ஏற்றுமதியில் சாதனை மைல்கல் - தமிழக அரசின் முன்முயற்சி

0 MINNALKALVISEITHI

முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம், மதுரை முருங்கை ஏற்றுமதியில் சாதனை மைல்கல் - தமிழக அரசின் முன்முயற்சி

உலக அளவில் முருங்கைக்கான சந்தை தேவையில், இந்தியா 80% சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. இந்திய அளவில், முருங்கை சாகுபடியில் தமிழ்நாடு முதன்மையாக உள்ளது. கடந்த 2023-24ம் ஆண்டின் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் தரவுகளின் படி தமிழ்நாட்டில் 20741 எக்டர் பரப்பளவில் முருங்கைகாய் சாகுபடி செய்யப்பட்டு 8,41,807 மெட்ரிக் டன்கள் உற்பத்தியுடன் இந்திய அளவில் தமிழ்நாடு முதன்மையாக திகழ்கிறது.

எனவே, தமிழ்நாட்டில் இருந்து முருங்கை ஏற்றுமதியை அதிகரிக்கவும், ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தவும். மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் முன்னோடி திட்டமாக, வேளாண் நிதிநிலை அறிவிப்பு 2021-22 ன் படி, "முருங்கை ஏற்றுமதி மண்டலம்" அறிவிக்கை செய்யப்பட்டு, ஒன்பது மாவட்டங்களுடன் கூடிய இம்மண்டலத்தில் ஏற்றுமதிக்கான உள்கட்டமைப்புகளை ஏற்படுத்த "முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்" மதுரையில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் குறு, சிறு மற்றும் நடுத்தர அமைச்சகத்தின் கீழ் உள்ள "தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (TNAPEX)" -ன் நிர்வாகக் கட்டுப்பாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA)-ன் தரவுகளின் படி, 2025ம் ஆண்டிற்கான உலகளாவிய முருங்கை ஏற்றுமதி சந்தை வாய்ப்பு 1000 கோடி அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. அவற்றுள் முருங்கை இலை பொடி, எண்ணெய்&விதை பொருட்கள் மற்றும் முருங்கை தேநீர் பொருட்களின் தேவை விபரங்கள் மதிப்பிடப்பட்டுள்ளன. அவற்றுள். முருங்கை இலைப் பொடி 600 கோடி அமெரிக்க டாலர்கள் பங்களிப்புடன் முதன்மையாக உள்ளது.

உலகளவில் முருங்கை இலை பொடி தேவையை பூர்த்தி செய்ய, தனித்தன்மையான முருங்கை இலை சாகுபடிக்கென சுமார் 11,000 ஏக்கர் தேவைப்படும் என கணக்கிடப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கை இலை பொடி அதிக சந்தை வாய்ப்பைக் கொண்டுள்ளது.

தற்போது தமிழ்நாட்டில் சுமார் 35 ஏற்றுமதி நிறுவனங்கள் மூலம் சுமார் 600 முதல் 800 ஏக்கர் பரப்பளவில் தனித்தன்மையான முருங்கை இலை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. மேலும், ஆண்டிற்கு சுமார் 720 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட முருங்கை இலைப் பொடிகள் தயாரிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.30.00 கோடி ஆகும். முருங்கை இலை சாகுபடியானது தனித்துவமான சாகுபடி முறை, உலகத்தரம் வாய்ந்த பதப்படுத்தும் மையம், ஏற்றுமதி சந்தை பிணைப்பு மற்றும் உள்ளூர் சந்தை வாய்ப்பு போன்ற ஏற்றுமதி சவால்களை எதிர் கொண்டு வருகின்றன.


இத்தகைய சவால்களை எதிர்கொள்ள, தமிழ்நாடு அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம் மூலம் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றுள். வருவாய் கிராமம் வாரியான விழிப்புணர்வு கூட்டங்கள். சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சிகள், சந்தை பிணைப்பு ஏற்படுத்துதல், ஏற்றுமதி தரத்தினை உறுதி செய்ய பொதுவான பதப்படுத்தும் மையம் அமைக்க விரிவான தொழில்நுட்ப ஆலோசனை, திட்ட அறிக்கை தயாரித்தல், தகுதியான திட்டத்தின் மூலம் நிதி உதவி போன்றவை அடங்கும்.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 10.09.2024 அன்று முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம்-மதுரை மூலம் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, மாவட்ட மேம்பாட்டு மேலாளர், தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கி (NABARD) ஆகியோருடன் ஒருங்கிணைந்து, திருநெல்வேலி மாவட்டம். திசையன்விளை வட்டாரம், நவ்வலடி கிராமத்தில், தாமிரபரணி உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவன உழவர்களுக்கும், தனியார் நிறுவனத்திற்கும் முருங்கை இலை சந்தை பிணைப்பு ஏற்படுத்த கூட்டம் நடத்தப்பெற்றது.

இதன் பயனாக, சுமார், 20 ஏக்கர் பரப்பளவிற்கு விவசாய பெருமக்களுடன் அங்கக முறையில் முருங்கை இலை சாகுபடி மேற்கொள்ள சந்தை பிணைப்பு ஏற்படுத்தப்பட்டு, கடந்த ஆறுமாதங்களில், 60 மெட்ரிக் டன்கள் அளவிற்கு தரமான பசும் முருங்கை இலைகள் தனியார் நிறுவனம் மூலம், நிலையான விலையில் விவசாய பெருமக்களிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. இம்முருங்கை இலைகள் பதப்படுத்தப்பட்டு 6 மெட்ரிக் டன்கள் முருங்கை இலை பொடி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இவை பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் சந்தை மதிப்பு ரூ 20.00 இலட்சம் ஆகும்.

தமிழக அரசின் சீரிய முயற்சியால், சந்தைப்பிணைப்பில் கிடைத்த வெற்றியை பதிவு செய்யும் வண்ணம் 24.03.2025 அன்று சிறிய அளவிலான நன்றி அறிவிப்புக் கூட்டம் திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டாரம், ரோஸ்மியாபுரம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் முனைவர் கே.அழகுசுந்தரம், மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர். TNAPEX அவர்களின் முன்னிலையில் நடத்தப்பெற்றது.

இக்கூட்டத்தில் திரு. இளங்கோ. தோட்டக்கலை துணை இயக்குநர். தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, திரு. டெலின்ஸ், வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர், தாமிரபரணி உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைமை செயல் அலுவலர் திரு. ஆனந்தன். தனியார் நிறுவன உரிமையாளர்கள் திரு. விஜய பெருமாள் மற்றும் சுதர்சன் (Green Health Industries), முன்னனி ஏற்றுமதியாளர் திரு.பஸ்டின் ராஜ், சந்தை பிணைப்பில் பயனடைந்த விவசாய பெருமக்கள் மற்றும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மைய ஏற்றுமதி ஆலோசகர் திரு. ம. சுரேஷ் குமார் (தோட்டக்கலை உதவி இயக்குநர்). தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஒளியரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், இக்கூட்டத்தில் வரும் 2025-26 ஆண்டில், 50 மெட்ரிக் டன்கள் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்படும் முருங்கை இலைப் பொடிக்கு தேவையான சந்தைப்பிணைப்பு ஏற்படுத்த மற்றொரு தனியார் நிறுவனம் மூலம் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர், TNAPEX சமர்பிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கோரிக்கை

கூடுதலாக, தமிழ்நாடு அரசின் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையத்திற்கு பிற தனியார் நிறுவனங்களிடமிருந்து. ஒரு ஆண்டிற்க்கு சுமார் 200 டன்கள் முருங்கை இலை பொடிக்கு தேவையான சந்தை பிணைப்பு ஏற்படுத்த வேண்டுகோள் கடிதம் பெறப்பட்டுள்ளது. மேற்கண்ட சந்தை பிணைப்புகள், TNAPEX- தனியார் நிறுவனம் விவசாய பெருமக்கள், இணைந்த முத்தரப்பு ஒப்பந்தம் மூலம் செயல்படுத்தப்படும்

எனவே, இயற்கை முறையில் முருங்கை இலை சாகுபடி மூலம் உறுதியான சந்தை பிணைப்பு பெற்று நிலையான வருமானம் பெறும் இத்தகைய நல்வாய்ப்பினை தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விருப்பமுள்ள உழவர் உற்பத்தியாளர் குழுக்கள். விவசாய ஆர்வலர்கள், தனியார் பதப்படுத்தும் நிறுவனங்கள் TNAPEX சென்னை அலுவலகத்தை md.tnapex@tn.gov.in. மற்றும் முருங்கை சிறப்பு ஏற்றுமதி சேவை மையம், மதுரை அலுவலகத்தை mefcmdu.tnapex@tn.gov.in, என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெற தமிழக அரசின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.