புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கம் மற்றும் பளுதூக்குதல் பயிற்சி மையம் திரு. உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

0 MINNALKALVISEITHI

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை ஒலிம்பிக் அகாடமியில் அமைக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையம், தேனி மாவட்டத்தில் புதிய பல்நோக்கு உள்விளையாட்டரங்கம், இராமநாதபுரம் மாவட்டத்தில் பளுதூக்குதல் பயிற்சி மையம் என மொத்தம் 9.45 கோடி ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உட்கட்டமைப்புகளை திறந்து வைத்தார்.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (4.4.2025) சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்க வளாகத்தில் உள்ள சென்னை ஒலிம்பிக் அகாடமியின் மூன்றாவது தளத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை திறந்து வைத்தார்.

விளையாட்டு என்பது விளையாடும் வீரர்களுக்கு மட்டுமல்லாமல் அந்த விளையாட்டு வீரர் சார்ந்த நாட்டின் பொதுமக்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த உற்சாகத்தை அளிக்க வல்லதாக திகழ்கின்றது. ஒரு விளையாட்டு வீரர் வெற்றி பெறும் போது, அவர் சார்ந்த நாட்டின் அனைவரும் மிகுந்த உற்சாகமும், தன்னம்பிக்கையும் கொள்கின்றனர். உலகின் முன்னணி நாடுகள் தங்களது விளையாட்டு வீரர்களை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மிகுந்த வலிமை மிக்கவர்களாக உருவாக்கி வருகின்றனர். சர்வதேச போட்டிகளில் நமது நாட்டு விளையாட்டு வீரர்கள் வெற்றிகள் பெற்றாலும் அதிக பதக்கங்கள் வெல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு தமிழ்நாட்டினை இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் முன்னணி விளையாட்டுத்தலமாக உருவாக்கி வருகின்றார்கள். அதற்காக, சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டு அரங்கங்கள், உள் விளையாட்டு அரங்கங்கள், அதிநவீன பயிற்சி கூடங்கள் ஆகியவற்றை அமைத்து வருகின்றார். 

சர்வதேச போட்டிகளில் வெற்றி பெற நமது விளையாட்டு வீரர்களுக்கு போட்டி நடைபெறும் நாட்டின் சுற்றுச்சூழலுக்கேற்ப உடல் தகுதி. மன வலிமை, உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை, காயங்கள் ஏற்பட்டால் உடனடியாக மீண்டு அடுத்தடுத்த போட்டிகளில் கலந்து கொள்வதற்கான அறிவியல் ரீதியான வசதிகள் தேவைப்படுகின்றது.

இதனை கருத்திற்கொண்டு புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தில் விளையாட்டு வீரர்களின் செயல்திறன், உடற்பயிற்சி, உடல் ஆரோக்கியம், உடலியல், உளவியல் மற்றும் விளையாட்டு மருத்துவம் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து அவர்களின் செயல்திறனை மேம்படுத்துவதும், உடற்பயிற்சி அறிவியலின் மூலம் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் நோக்கமாக கொண்டு அதிநவீன மருத்துவக் கருவிகள், விளையாட்டுகளின் தேவைக்கேற்ப விளையாட்டு வீரரின் உடலில் தேவைப்படும் தசைகளை வலுவேற்றும் வகையிலான சிறப்பு உபகரணங்கள் நிறுப்பட்டுள்ளன. மேலும், இம்மையத்தில் மனநல நிபுணர். ஊட்டச்சத்து நிபுணர். சிறப்பு பயிற்சியாளர்கள், உளவியலாளர்கள், அதிக பயிற்சி காரணமாக ஏற்படும் தசைப்பிடிப்பை சீரமைக்கும் வல்லுநர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

புதிய தமிழ்நாடு விளையாட்டு அறிவியல் மையத்தை திறந்து வைத்த மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டு வீரர்கள் சர்வதேச தரத்தில் அறிவியல் ரீதியாக பயிற்சிகள் பெறுவதற்காக செய்யப்பட்டுள்ள பல்வேறு வசதிகளை பார்வையிட்டார்.

மேலும் தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தில் 5.95 ТО ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள் விளையாட்டு அரங்கத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்த உள் விளையாட்டு அரங்கத்தில் நிர்வாக கட்டடம், பயிற்றுநர் அறை, விளையாட்டு வீரர்கள் தங்கும் அறை. பார்வையாளர்களுக்கான இருக்கைகள், மரத்திலான தரைதளம். உபகரணங்களுக்கான இருப்பு அறை மற்றும் ஒளிரும் மின்விளக்கு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த அரங்கத்தில் கையுந்துபந்து, கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போட்டிகள் நடத்தவும். பயிற்சி பெறவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகத்தில் ரூ. 50 லட்சம் மதிப்பில் பளுதூக்குதல் பயிற்சி மையத்தையும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு. சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.இ.பரந்தாமன்(எழும்பூர்), திரு.கே.எஸ்.சரவணகுமார் (பெரியகுளம்). திரு.செ.முருகேசன் (பரமக்குடி). இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர்.அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் திரு.ஜெ.மேகநாத ரெட்டி, இ.ஆ.ப.. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் டாக்டர்.அசோக் சிகாமணி உள்பட அரசு அலுவலர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.