நீலகிரி வரையாடு திட்டம் தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு

0 MINNALKALVISEITHI

நீலகிரி வரையாடு திட்டம் தமிழ்நாட்டில் இரண்டாம் ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு நிறைவு

மாநில விலங்கான நீலகிரி வரையாட்டை பாதுகாக்க நீலகிரி வரையாடு திட்டம் தமிழ்நாடு அரசால் துவக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு 27.04.2025 அன்று நிறைவுபெற்றது. தமிழ்நாட்டில் உள்ள 14 வனப் பிரிவுகளின் 176 கணக்கெடுப்புத் தொகுதிகளில் இது நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சுமார். 800 களப்பணியாளர்கள் வடக்கு முதல் தெற்கு மற்றும் கிழக்கு முதல் மேற்கு வரை சுமார் 2000 கி.மீ. தூரத்திற்கு தோராயமாக 230 சதுர கி.மீ. பரப்பளவில் நடைபயணம் மேற்கொண்டு மேற்படி கணக்கெடுப்பை நடத்தினர். கணக்கெடுப்பு சமயத்தில் நீலகிரி வரையாடுகள் அதிகாலை 6 மணி முதல் காலை 10 மணி வரை பெரும்பாலான கணக்கெடுப்புத் தொகுதிகளில் களப்பணியாளர்கள் பார்வையில் தென்பட்டன. மேலும், பல இடங்களில், மந்தைகள் இளங்குட்டிகள் மற்றும் குட்டிகளுடன் காணப்பட்டன. இந்த ஆண்டு பெண் மற்றும் குட்டிகள் விகிதம் நன்றாக இருக்கலாம் என்று அனுமானிக்கப்படுகிறது. 


களப்பணியாளர்கள் நீலகிரி வரையாட்டின் புழுக்கைகள் மற்றும் மாமிச உண்ணிகளின் எச்சங்கள் ஒட்டுண்ணி பகுப்பாய்விற்கு சேகரித்துள்ளனர் இது ஒட்டுண்ணிகளின் வாழ்க்கை சுழற்சியையும், நீலகிரி வரையாடுகளுடன் அவற்றிற்கு உள்ள தொடர்பையும் கண்டறிய உதவும் கோயம்புத்தூர் கோட்டத்தில் உள்ள பெரியாட்டுமலை பகுதியில் பத்தாண்டுகளுக்கு பிறகு முந்தைய கணக்கெடுப்பில் நீலகிரி வரையாடு காணப்பட்ட அதே பகுதியில் மீண்டும் அதே வரையாட்டு கூட்டம் பார்வையில் தென்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேகமலை கோட்டம் சின்னமனூர் வனச்சரகத்திலுள்ள நீலகிரி வரையாட்டின் புதிய வாழ்விட பகுதியான பசுமலை தொகுதியில், இந்த கணக்கெடுப்பில் நீலகிரி வரையாடு மீண்டும் பார்வையில் தென்பட்டது. இது ஆரோக்கியமான வாழ்விட மீட்சியின் அறிகுறியாகும். மேலும் நீலகிரி வரையாடுகள் இந்த வாழ்விடத்தைப் பயன்படுத்துவதற்கு எந்த மானுடவியல் அழுத்தமும் இல்லை என்று தெரிய வருகிறது.

குறைந்த உயரத்திலுள்ள வரையாட்டு வாழ்விடமான பேயனார் வரையாட்டு மொட்டைப் பகுதியில் (240 மீ கடல் மட்ட உயரம்) 7 வரையாடுகள் களப்பணியாளர்களின் பார்வையில் தென்பட்டன. இப்பகுதியானது மிகச்சிறந்த பாறை மற்றும் தப்பிக்கும் நிலப்பரப்பினை கொண்ட தொகுதிகளில் ஒன்றாகும். இங்கு நீலகிரி வரையாடுகள் வறண்ட முட்கள் நிறைந்த வனப்பரப்பை பயன்படுத்துகின்றன. மேகமலை கோட்டத்தில் உள்ள மங்களாதேவி பகுதியில் வரையாட்டின் புழுக்கைகள் கண்டறிப்பட்டுள்ளது. இது நீலகிரி வரையாடு மீண்டும் இப்பகுதியை பயன்படுத்தி பின் இப்பகுதியை விட்டு வெளியேறி இருக்ககூடும் என அனுமானிக்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள மூன்று சேகரிக்கப்பட்ட புழுக்கைகள் மற்றும் மாமிச உண்ணிகளின் எச்ச மாதிரிகள் எத்தனால் குப்பிகளில் சேகரம் செய்யப்பட்ட தகவல்கள் குறிக்கப்பட்டது. இது ஆய்வக பகுப்பாய்விற்கும். குறிப்பாக ஒட்டுண்ணி பகுப்பாய்விற்கும். TANUVAS இல் உள்ள வனவிலங்குப் பிரிவில் அனுப்பத் தயாராக உள்ளது.

கிராஸ் ஹில்ஸ் தேசிய பூங்கா மற்றும் முகூர்த்தி தேசிய பூங்காவில் நீலகிரி வரையாடுகள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் காணப்பட்டன. இந்த இரு பெரு நீலகிரி வரையாடு கூட்டங்கள் சோலைப் புல்வெளிகளைப் பராமரிக்க இன்றியமையாதவையாகும். இதற்கு புகைப்பட ஆவணங்கள் சான்றாகும்.

தரவுத் தாள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. தரவுத் தாள்கள் திட்ட இயக்குநர் அலுவலகத்திற்கு கிடைத்த பிறகு தரவுகள் கணினி மயமாக்கப்பட்டு தரவு செயலாக்கம் மற்றும் தரவு விளக்கம் ஆராய்ச்சி பணியாளர்கள் மற்றும் நிபுணர்களுடன் மேற்கொள்ளப்படும்.

இந்த இரண்டாவது ஒருங்கிணைந்த நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு திட்ட இயக்குநர் திரு மா.கோ.கணேசன் தலைமையில் திரு கே.கணேஷ்ராம். உதவி இயக்குநர் திரு. சௌ. செந்தூரசுந்தரேசன். வனச்சரக அலுவலர் திரு. பொ. வைரவராஜா, வனவர், முனைவர் அசோக்குமார். திட்ட விஞ்ஞானி. முதுநிலை ஆராய்ச்சியாளர்களான முனைவர் சுப்பையன், திரு. மணிகண்டன் திரு. நேசன், திரு. ராகவேந்திரன் ஆகியோர் துணையுடன் செயல்படுத்தப்பட்டது. தமிழ்நாடு கால்நடை பல்கலைகழக நிபுணர் டாக்டர். வளர்மதி WWF-INDIA நிறுவனத்தின் திரு. பிரெடிட் மற்றும் திரு. வினோத் அவர்கள் இக்கணக்கெடுப்பிற்கு உதவினர் 14 நீலகிரி வரையாடு வாழ்விட வனக்கோட்டங்களின் மாவட்ட வன அலுவலர்கள் துணை இயக்குநர்கள் வன உயிரினக் காப்பாளர்கள் அனைத்துவித உதவிகளையும் செய்தனர்.

IUCN இந்திய நாட்டு பிரதிநிதி டாக்டர். யாஷ் வீர் பட்நாகர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் திருமதி. சுப்ரியா சாகு, இ.ஆ.ப., அவர்கள் இந்த முழு கணக்கெடுப்பின் செயல்பாடுகளை கண்காணித்ததுடன் களப்பணியாளர்களை கோயம்புத்தூரில் சந்தித்து கணக்கெடுப்பினை துவக்கி வைத்தனர். முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வனஉயிரினக் காப்பாளர் திரு. ராகேஷ் குமார் டோக்ரா இ.வ.ப. மற்றும் மற்ற மூத்த வனத்துறை அதிகாரிகளும் இந்த கணக்கெடுப்பை கண்காணித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.