தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் மற்றும் அதற்கான பிரத்யேக இணையதளம் - மு.க.ஸ்டாலின்

0 MINNALKALVISEITHI

தமிழ்நாடு சட்டமன்ற ஆவணங்கள் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு அதற்கான பிரத்யேக இணையதளம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (25.4.2025) தலைமைச் செயலகத்தில், சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவை நிகழ்வுகளின் பதிவுகளைக் கணினிமயமாக்கும் பணியின் முதற்கட்டமாக, 1952-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு, அதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 'tnlasdigital.tn.gov.in' என்ற இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

2021-ஆம் ஆண்டு சட்டமன்றப் பேரவையின் நூறாண்டு நிறைவினையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் 13-8-2021 அன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், 1921-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவை நிகழ்வுகளின் பதிவுகள் கணினிமயமாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சட்டமன்ற ஆவணங்கள் முறையே சட்டமன்றப் பேரவை மற்றும் சட்ட மேலவையின் நடவடிக்கை குறிப்புப் புத்தகங்கள், குழுக்களின் அறிக்கைகள், பேரவை முன் வைக்கப்பட்ட ஏடுகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தித் துணுக்குகள், காணொலி துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் நவீன முறையில் கணினிமயமாக்கம் (Digitization) செய்யும் பணியானது தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் மேற்பார்வையின்கீழ் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தில் நடைபெற்று வருகின்றது.

தற்போது முதற்கட்டமாக, 1952-ஆம் ஆண்டு முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சட்டமன்ற ஆவணங்கள் கணினிமயமாக்கம் செய்யப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக 'tnlasdigital.tn.gov.in' என்ற இணையதளத்தில் மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்கள், பொது மக்கள், ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் பயனடையும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இணையதளத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு சட்டமன்றப் பேரவைத் தலைவர் திரு. மு. அப்பாவு, மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சரும், அவை முன்னவருமான திரு. துரைமுருகன், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாண்புமிகு சட்டப்பேரவை துணைத் தலைவர் திரு. கு. பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா திரு. கா. ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., நிதித்துறை முதன்மைச் செயலாளர் திரு. த. உதயச்சந்திரன்,இ.ஆ.ப., சட்டமன்றப் பேரவை முதன்மைச் செயலாளர் திரு. கே. சீனிவாசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.