சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகளை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு. மு.பெ. சாமிநாதன் அவர்கள் இன்று (22.04.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
முத்தமிழறிஞர் மாண்புமிகு அய்யா கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த பொழுது சென்னையில் சிறப்பு வாய்ந்த வகையில் அய்யன் திருவள்ளுவரைப் போற்றுகின்ற வகையில் கோட்டம் அமைக்கப்பட்டது. 1976-ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த வள்ளுவர் கோட்டம் இடையிடையே பராமரிப்பு பணிகள் இல்லாமல் சிதிலமடைந்தது.
இந்த நேரத்தில், தமிழ்நாட்டின் முதலமைச்சராக அண்ணன் தளபதி அவர்கள் பொறுப்பேற்ற பிறகு, கடந்த ஆண்டுக்கு முந்தைய ஆண்டு இதற்கென ஏறத்தாழ சுமார் 80 கோடி ரூபாய் நிதியை தந்து மிகச் சிறப்பாக புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்கள். அந்த வகையில் வள்ளுவர் கோட்டப்பணிகள் இன்றைக்கு நடைபெற்றுக் கொண்டு வருகிறது. பராமரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது.
வள்ளுவர் கோட்டம் சுமார் 80 கோடி ரூபாய் பணிகள் இன்றைக்கு புதுப்பொலிவு பெற்றிருக்கிறது என்று சொல்லக்கூடிய வகையில் வள்ளுவர் கோட்டம் அமைந்து கொண்டிருக்கிறது. இதில் ஒலி ஒளி காட்சி, அதேபோல் திருக்குறளைப் பற்றி ஒரு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் அதற்கான வகுப்புகள் இங்கு துவங்குகின்ற வகையில் இன்றைக்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வள்ளுவர் கோட்டம் பணியின் முன்னேற்றம் குறித்து அடிக்கடி கேட்டறிந்து கொண்டு இருக்கிறார்கள். அதே நேரத்தில், இதை விரைவாக திறக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறார்கள்.
பொதுப்பணித் துறை மூலம் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் செய்தித் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய இந்த வள்ளுவர் கோட்டப் பணிகள் முடிவுற்ற பிறகு, இங்கு சுமார் 1500 பேர் அமர்ந்து நிகழ்ச்சி நடத்தக்கூடிய வகையில் சிறப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது. குளிர்சாதன வசதியோடு இந்த அரங்கங்கள் எல்லாம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.
இன்றைக்கு நிலையான ஒரு சின்னமாக அய்யன் திருவள்ளுவன் புகழை போற்றுகின்ற வகையில் இந்த வள்ளுவர் கோட்டம் அமைந்திருக்கிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மயிலாப்பூரில் வள்ளுவருக்கு கோவிலை கட்டினார்கள். அதே போல், வள்ளுவர் கோட்டம். இன்றைக்கு வெள்ளிவிழா கண்டிருக்கக் கூடிய குமரிமுனையில் இருக்கக்கூடிய அய்யன் திருவள்ளுவர் சிலை என அய்யன் திருவள்ளுவருக்கு புகழ் சேர்க்கின்ற வகையில் திராவிட முன்னேற்ற கழக அரசு அய்யா முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தாலும் சரி, அதே போல் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு அண்ணன் தளபதி அவர்கள் இருந்தாலும் சரி. சிறப்பாக அய்யன் திருவள்ளுவரின் புகழை போற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் விரைவில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.
கேள்வி - எந்த மாதம் திறக்கப்படும்?
பதில் மே மாதம் இறுதிக்குள் பணிகள் நிச்சயமாக முடிவடையும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நேரத்திற்கேற்ப இதற்கான தேதி நிர்ணயம் செய்யப்பட்டு திறப்பு விழா காணும்.
இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் மரு.நா.எழிலன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மரு.இரா.வைத்திநாதன், இ.ஆ.ப. பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக்குழு தலைவர் திரு.நே.சிற்றரசு மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.