சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட தமிழ்நாடு அரசின் சார்பில் 2.50 கோடி ரூபாய் நிதி

0 MINNALKALVISEITHI

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்திட தமிழ்நாடு அரசின் சார்பில் 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு.

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (6.4.2025) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் நிறுவனம் மற்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் இணைந்து நடத்திய பத்திரிகையாளர்களுக்கான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுக் கோப்பைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு தேர்தல் நடைபெற்றதற்கும். தேர்தலில் வெற்றி பெற்றிருக்கக் கூடிய நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் 58 அணிகள் பங்கேற்ற சிறப்பான கிரிக்கெட் போட்டியை நடத்தியதற்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கின்றேன். கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றவர்கள், பரிசு பெற்றவர்கள், கலந்து கொண்டவர்கள், இப்போட்டியை சிறப்பாக நடத்திய நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

விளையாட்டுப் போட்டிகளில் பொதுவாக நடுவர்கள் இருப்பார்கள். ஆனால் இங்கு நடுவர்களே விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டுள்ளார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். நடுநிலையோடு, பாரபட்சமின்றி, உண்மையாக செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்களாகிய நீங்கள் தான். அதனால்தான் விளையாடியவர்களை நடுவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றேன். இது போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் போது உடல் நலம், மனநலம் இரண்டுக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு நடத்தப்படுகின்றது.முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் தவிர்க்க முடியாத, மறக்க முடியாத அடையாளம் என்றால் அவரது பேனாவை சொல்லலாம். அதுபோன்று இங்கு வந்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் நண்பர்கள் அனைவருக்கும் பேனாவை தான் அடையாளமாக சொல்லலாம். அந்த உரிமையோடு விளையாட்டு துறை அமைச்சர், துணை முதலமைச்சர் என்பதை விட நானும் ஒரு பதிப்பாளர். பத்திரிகை துறையுடன் தொடர்பு கொண்டவன் என்ற உரிமையோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளேன். முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவருடைய மூத்த பிள்ளை முரசொலியில் நான் தலைமை நிர்வாகியாக பல வருடங்கள் பணியாற்றி உள்ளேன். முரசொலியின் தலைமை நிர்வாகியாக அண்ணன் தயாநிதி மாறன் அவர்களுக்குப் பிறகு சில ஆண்டுகளாக தலைமை நிர்வாகியாக பொறுப்பேற்று, பணியாற்றியுள்ளேன். இப்போது கூட முரசொலியில் கடைசி பக்கத்தில் இளைஞரணியின் சார்பாக முத்தமிழ் அறிஞர் பதிப்பகத்தின் சார்பில் பாசறை பக்கம் வாயிலாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகின்றோம்.

இங்கு பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான அரசு அமைந்த பிறகு பத்திரிகையாளர்களின் நலனுக்காக செயல்படுத்துகின்ற ஒன்றிரண்டு திட்டங்களை மட்டும் இங்கே நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நம்முடைய அரசு அமைந்ததுமே பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அந்த வாரியத்தின் மூலமாக இதுவரை 11 லட்சம் ரூபாய் அளவிற்கு அரசு சார்பாக நலத்திட்ட உதவிகளை வழங்கி இருக்கின்றோம். நானும் அண்ணன் சேகர் பாபு அவர்களும் இதே அரங்கத்தில் பத்திரிகையாளர்களுக்கான பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம். அதேபோல கலைஞர் எழுதுகோல் விருது மூத்த பத்திரிகையாளர் திரு. சண்முகநாதன், திரு. வி.என்.சாமி, அண்ணன் நக்கீரன் கோபால் உள்ளிட்ட மூத்த பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 10,000 ரூபாயாக இருந்த பத்திரிகையாளர் ஓய்வூதிய தொகையை நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 12,000 ரூபாயாக உயர்த்தி வழங்கி வருகின்றார்கள். பத்திரிகையாளர்கள் குடும்ப ஓய்வூதியம் 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகின்றது.

2021 ஆம் ஆண்டு நமது அரசு பொறுப்பேற்றதுமே பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி 3 லட்சத்திலிருந்து ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டது. பத்திரிகையாளர்களின் கோரிக்கையின் அடிப்படையில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு மீண்டும் அந்த நிதியை 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கியுள்ளார்கள். கொரோனா நேரத்தில் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. கொரோனா நேரத்தில் உயிரை பணயம் வைத்து பணி செய்த சுமார் 6,000 பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக மொத்தம் 2 கோடியே 89 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர கட்டணமில்லா பேருந்து பயணம், செய்தியாளர் அங்கீகார அட்டை என ஏராளமான பயன்களை நமது அரசு சார்பாக தொடர்ந்து வழங்கி வருகின்றோம். இப்படி நமது அரசு தொடர்ந்து பத்திரிகையாளர் நலனுக்காக திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கனை சந்தித்து வாழ்த்து பெற்றீர்கள். அப்போது அளித்த பல்வேறு கோரிக்கைகளில், முக்கியமான கோரிக்கையாக பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்தி சீரமைக்க அரசு சார்பாக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்தீர்கள். அதை நிறைவேற்றிடும் வகையில் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட என்னிடம் அறிவுறுத்தி இருக்கின்றார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் உட்கட்டமைப்பை மேம்படுத்துகின்ற வகையில் நம்முடைய அரசு சார்பாக 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்ற தகவலை இந்த நேரத்தில் உங்களிடம் நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களுடைய மற்ற கோரிக்கைகளுக்கும் விரைவில் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று கூறிக்கொண்டு. இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்ட அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாண்புமிகு இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. தயாநிதி மாறன், திரு. விஜய் வசந்த், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. எம். அண்ணாதுரை, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் திரு. எம். சுரேஷ் வேதநாயகம், பொதுச்செயலாளர் திரு. எம். ஆசிப், துணை தலைவர்கள் திரு. கே. சுந்தரபாரதி.திரு. ஜெ. மதன், இணைச் செயலாளர் திரு. நெல்சன் சேவியர், பொருளாளர் திரு. எஸ்.மணிகண்டன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள், பத்திரிகை ஆசிரியர்கள், தொலைக்கட்சிகளின் செய்தியாசிரியர்கள், முத்த பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்கள், பத்திரிகையாளர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.