கவிச்சக்கரவர்த்தி கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம்
கம்பன் ஓர் உலகப்
பெருங்கவிஞர்; உலகப் பெருங்காப்பியங்களின் வரிசையில், உன்னதமான இடம் வகிக்கும் ஒரு
பெருங்காப்பியத்தைப் படைத்த பெருமைக்கு உரியவர்: 'புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு'
என்று சொல்லிப் பெருமிதம் கொள்ளும் அளவிற்கு அருந்தமிழுக்கு அழியாதப் புகழ்
சேர்த்தவர். இராமாவதாரம் என்ற கம்பர் காப்பியம் பாலக் காண்டம், அயோத்தியாக்
காண்டம், ஆரணியக் காண்டம், கிட்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், இலங்கைக் காண்டம்
என காண்டங்களாக 10,368 பாடல்களைக் கொண்டது.
ஒரு பாடலுக்கு நான்கு சீர்களில் இருந்து
எட்டுச் சீர்கள் வரையிலான நான்கு அடிகளைக் கொண்ட பாடல்களைக் கொண்டு படைத்தார்.
கம்பன் உருவாக்கிய காப்பிய மரபுகள், அவருக்குப் பின் காப்பியப் படைப்பில் ஈடுபட்ட
அனைத்துக் கவிஞர்களாலும் பின்பற்றப்பட்டன என்பதில் ஐயமில்லை. 'சிலையெழுபது',
'சடகோபர் அந்தாதி', 'சரசுவதி அந்தாதி', 'திருக்கை வழக்கம், 'ஏரெழுபது' மற்றும்
'மும்மணிக்கோவை' போன்றவை கம்பர் படைத்த படைப்புகளாகும். கம்பரின் கவித்திறனை நேரில்
கண்டு வியந்த சோழ மன்னர், 'கவிஞர்களின் பேரரசர் என்றும் 'கவிச்சக்கரவர்த்தி'
என்றும் பட்டம் சூட்டினார்.
"கம்பன் வீட்டுத் கட்டுத்தறியும் கவிபாடும்" என்றொரு
பழமொழியே உருவாகும் அளவிற்கு, கம்பரது புகழும், கவித்திறமையும் அனைவராலும்
இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. கவிச்சக்கரவர்த்தியை நினைவுகூரும் வகையில்
தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ் வளர்ச்சித் துறையால் ஆண்டுதோறும் மார்ச்சுத்
திங்கள் 24ஆம் நாளன்று சென்னை அண்ணா சதுக்கத்திலுள்ள கம்பர் சிலைக்கு மலர் மாலை
அணிவித்து மலர் வணக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அவ்வகையில், 24.03.2025
திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு கம்பர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை
அணிவித்து சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாண்புமிகு அமைச்சர்
பெருமக்கள்.வணக்கத்திற்குரிய மேயர், துணை மேயர் அவர்கள், அரசு உயர் அலுவலர்கள்,
தமிழ் அறிஞர்கள், தமிழ் வளர்ச்சித் துறை அலுவலர்கள், பொதுமக்கள் ஆகியோர்
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.