மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர்
திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் ரூ.1.61 கோடி
மதிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பிரத்யேக மரப்பலகைகளாலான பாதையை
திறந்து வைத்து, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர்
அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசின் சார்பில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக
பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றோம்.
குறிப்பாக
எல்லோருக்கும் எல்லாம் என்ற தத்துவத்தின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கும்
எல்லாம் கிடைக்க வேண்டும் என்று நம்முடைய அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது.
அதன் ஒரு பகுதியாகத்தான் கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த ஆட்சி அமைந்தவுடன்
மாற்றுத்திறனாளிகள் ஒரு கோரிக்கை வைத்தார்கள்.
சென்னை மெரினா கடற்கரையில்
மற்றவர்கள் போல மாற்றுத்திறனாளிகளும் கடற்கரைக்கு, கடலுக்கு அருகில் செல்ல
வேண்டும். கடல் அலைகளில் தங்களது கால்களை நினைக்க வேண்டும். அதற்கான வசதிகளை
ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். மாண்புமிகு முதலமைச்சர்
அவர்களின் கட்டளையை ஏற்று உடனே அந்தப் பணிகளை செய்து முடித்தோம்.
மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் சென்று கால் நனைக்கும் வகையில் பிரத்தியேக
நடைபாதை அமைக்கப்பட்டது. அந்த நடைபாதை அமைக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு நாளும்
ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் மெரினா கடற்கரையில் கடல் அலைகளில் தங்களின்
கால்களை நனைத்து வித்தியாசமான அனுபவத்தை தொடர்ந்து அனுபவித்து வருகின்றார்கள்.
தங்களது மகிழ்ச்சியை எங்களுக்கு வெளிப்படுத்தி வருகின்றார்கள்.
மெரினாவில்
மாற்றுத்திறனாளிகளுக்கு கிடைத்த அந்த அனுபவமும், மகிழ்ச்சியும் பெசன்ட் நகர்
கடற்கரை பகுதியிலும் கிடைக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தார்கள். எனவே இங்கேயும்
பிரத்தியேக நடைபாதை அமைக்கும் பணிகளை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு
ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார்கள். சுமார் ஒரு கோடியே 61 லட்சம் செலவில் இந்த
நடைபாதை அமைக்கும் பணி துவங்கப்பட்டது.
பணிகள் நடைபெற்ற போதே தொடர்ந்து நானும்
மாண்புமிகு அமைச்சர் அவர்களும், மேயர் அவர்களும், அரசு அதிகாரிகளும் மாண்புமிகு
முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டிருந்தோம். ஆறு
மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று இன்று இந்த பிரத்யேக பாதையை திறந்து
வைக்கின்றோம்.
190 மீட்டர் நீளமும், 2.80 மீட்டர் அகலமும் கொண்ட இந்த நடைபாதை கடல்
அருகே செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பாதை மட்டுமின்றி, வாகனங்கள்
நிறுத்தும் வசதி, சக்கர நாற்காலிகளை நிறுத்தும் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் இந்த வசதிகளைபயன்படுத்திக் கொள்ளுமாறு நாங்கள்
கேட்டுக் கொள்கின்றோம்.
விரைவிலேயே இது போல திருவான்மியூர் கடற்கரையிலும்
மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதை அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரவுள்ளது. அதற்கான
டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்னும் நான்கு, ஐந்து மாதங்களில் அந்த பணிகள்
நிறைவடைந்து, அதையும் நாங்கள் திறந்து வைப்போம். அதனைத் தொடர்ந்து சென்னைக்கு
வெளியேயும் நாகை மாவட்டத்திலும் வேளாங்கண்ணி கடற்கரையில் இந்த வசதி வேண்டுமென்று
கேட்டுள்ளார்கள்.
இந்த திட்டங்கள் எல்லாம் மாற்றுத்திறனாளிகள் மகிழ்கின்ற வகையிலான
அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகின்றது என்பதற்கு சாட்சியாக
விளங்குகின்றன என்று மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.