உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம்

0 MINNALKALVISEITHI
உயர்கல்வியில் தமிழ்நாடு பொற்காலமாக திகழ வேண்டும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் உன்னத நோக்கத்தினை நிறைவேற்றிட, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் 
இன்று (21.02.2025) சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில், மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள் தலைமையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பயிலகங்களின் வளர்ச்சி குறித்து, அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் அரசு பலவகைத் தொழில்நுட்பக் கல்லூரிகளின் முதல்வர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாட்டிலுள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு பலவகை தொழில் நுட்பக் கல்லூரிகள் மற்றும் தொழில் நுட்பக் பயிலகங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை உயர்த்துதல், தற்போதைய காலகட்ட தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய பாடத்திட்ட முறைகள் மற்றும் செய்முறைகள் அறிமுகம் செய்தல், மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் திட்டங்கள் முறையாக சென்றடைதல், மேம்படுத்துதல் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துதல் மற்றும் உயர்கல்வித் துறையின் வளர்ச்சிகள் குறித்து கல்லூரிகளின் முதல்வர்களுடன் கலந்துரையாடினார். மேலும், வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கைக்கும் மற்றும் உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்தும் கல்லூரி முதல்வர்களிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இக்கலந்துரையாடலில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது:- 

பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் பயிலகங்களின் வளர்ச்சி குறித்து கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கும் அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த காலகட்டத்திற்கு இந்த கலந்துரையாடல் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும். கல்லூரி முதல்வர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிர்வாக பணியினை மட்டும் மேற்கொள்ளாமல், கல்விப்பணியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவேண்டும். முதல்வர்கள் மற்ற ஆசிரியர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். நமது கலாச்சாரம். வரலாறு, தமிழ் வளர்ச்சி போன்றவற்றிற்கு முன்னுரிமை கொடுத்து மாணவர்கள் இதனை அறிந்துகொள்ளும் வகையில், போதுமான கருத்தரங்குகள், கூட்டங்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்த வேண்டும். அதேபோல், மாணவர்களின் திறனை வளர்த்திட தற்போது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் என்னென்ன மேம்பாடுகளை அந்தந்த கல்லூரிகளுக்கு செய்ய இயலும் என்பதை கண்டறிந்து அத்திட்டத்தினை மேலும். சிறப்பாக மேற்கொள்ளவேண்டும். செயல்படுத்த நடவடிக்கைகளை மேலும், அடிப்படை பாடப் பிரிவுகளின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தும் அந்த பாடத்திட்டங்களில் தற்போதுள்ள தொழில்நுட்பத்திற்கு வேலைவாய்ப்பு பெறுவதற்கு ஏற்ப திருத்தி அமைத்து மாணவர்களுக்கு புதிய விழிப்புணர்வு அளிப்பது குறித்து தங்களின் ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பாலிடெக்னிக் பொறியியல் கல்லூரிகளில் உள்ள ஆய்வகங்களை மேம்படுத்துதல், தற்பொழுது க்யூட் என்ற பெயரில் இளங்கலை பட்டப்படிப்புக்கே நுழைவு தேர்வு மீண்டும் கொண்டு வர ஒன்றிய அரசு முயற்சி செய்து கல்வியை ஒரு சாரார்க்கு மட்டுமே கொண்டு சேர்க்க முயற்சி செய்கிறது. 

UGC 2024 வரைவு அறிக்கையில், தொழிற்கல்வியிலிருந்து பொதுக் கல்விக்கு அல்லது பொதுக் கல்வியிலிருந்து தொழிற்கல்விக்கு இடம்பெயர்தல் மாணவர்கள் தங்கள் இலக்கை அடைய உதவாது. இது முற்றிலும் மாணவர்களின் நலனுக்கு எதிராகவே அமையும். சமூக நீதிக்கு எதிரானது. இதனை முதல்வர்கள் மாணவர்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வை ஏற்ப்படுத்த வேண்டும். மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் புதுமைப்பெண் திட்டம் (மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம்) அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயில சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாளது வரை 4.25 இலட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். 

தமிழ்ப்புதல்வன் திட்டம் 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நாளது வரை 3.52 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். நான் முதல்வன் திட்டம் ஆண்டுதோறும் 10 இலட்சம் மாணவர்களை திறன் வாய்ந்தவர்களாக உருவாக்கும் இலக்குடன் தொடங்கப்பட்ட இத்திட்டம் இதுவரை 14.68 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். வளாக வேலைவாய்ப்பு முகாம்களின் மூலம் 2,58,597 மாணவர்கள் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கல்வியும், சுகாதாரமும் தனது இரு கண்களாக பாவித்து செயல்பட்டு வருகிறார். மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் விளையாட்டுத்துறையில் மாணவர்களை ஊக்குவித்து வருகிறார். உயர்கல்வித் துறையினை மேலும் செம்மைப்படுத்த ஏதுவாக இந்த கலந்துரையாடலில் இடம்பெற்றுள்ள கல்லூரி முதல்வர்கள் பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரிகளின் தரத்தினை மேலும் உயர்த்திடவும், எண்ணிக்கையை உயர்த்திடவும் கல்லூரி முதல்வர்கள் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு பணிபுரியுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

மேலும், அரசின் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் மாணாக்கர்கள் நலன் சார்ந்த திட்டங்கள் தங்குதடையின்றி மாணாக்கர்களுக்கு கிடைக்க கல்லூரி முதல்வர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், உயர்கல்வி சார்ந்த திட்டங்கள் மற்றும் அனைத்து முயற்சிகளுக்கும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களும் என்றென்றும் உறுதுணையாக இருப்பார்கள். இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் திரு.எம்.பி.விஜயகுமார், இ.ஆ.ப., (ஓய்வு), தொழில்நுட்பக் கல்வி ஆணையர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா, இ.ஆ.ப., அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் ஜெ.பிரகாஷ் மற்றும் கல்லூரி. பாலிடெக்னிக் முதல்வர்கள் பங்கேற்றனர். முன்னதாக, மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் கிண்டி தொழிற் பயிற்சி நிலையத்தில் அமைந்துள்ள Industry 4.0 தொழில்நுட்ப மையத்தில் பலவகை தொழில் நுட்பக் கல்வி விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் பயிற்சியினை பார்வையிட்டு, விரிவுரையாளர்களிடம் பயிற்சியின் தன்மை, பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

إرسال تعليق

0 تعليقات
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.