சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வருகிற 11-ந் தேதி வரையில் (அதாவது
இன்று முதல் 6 நாட்களுக்கு) தமிழகத்தின் கடலோர பகுதிகளில் சில இடங்களிலும், உள்
தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இன்று
(திங்கட்கிழமை) காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். நீலகிரி மாவட்டத்தில்
இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்பு உள்ளது. தஞ்சை, திருவாரூர்,
நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால்
பகுதியிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு
மேகமூடத்துடன் காணப்படும். காலையில் லேசான பனிமூட்டம் இருக்கும். இதேபோல,
தென்மேற்கு அரபிக்கடலின் மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55
கிலோ மீட்டர் வேகத்தில் வீசும். இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும்
வீசக்கூடும். எனவே, இன்று மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென
அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.